மாநில உரிமைகளை ஆளுநர் மதிக்க வேண்டும்!-

ஆளுநர் ஆர். என் ரவிக்கும் முதல்வர்   ஸ்டாலினுக்கும் வெளிப்படையாக சட்டசபையிலேயே மோதல் வெடிக்கும் அளவிற்கு சென்றுள்ளது என்று மீடியாக்கள் எழுதுகின்றன. உண்மைதான்
இருவருக்குமான மோதல் அடுத்த கட்டத்தைதான் எட்டியுள்ளது. இதற்கு காரணம் ஆளுநர் தான்.
முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டே செல்கிறார் ஆளுநர் ரவி்.



தமிழ்நாடு சட்டசபை கூடும் முன்பே பரபரப்பான சூழ்நிலைதான். ஆளுநர் ஆர். என் ரவி சட்டசபையில் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஆளுநர் ஆர். என் ரவியின் உரை கடந்த 9ந்தேதி சட்டசபை எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது.

சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவியின் உரை சர்ச்சையாக 3 காரணங்கள் உள்ளதாக மீடியாக்கள் சொல்கின்றன

தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் படிக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் ஆளுநர் அதை படிக்காமல் தானாக சில வார்த்தைகளை சேர்த்து, சில வார்த்தைகளை நீக்கி உள்ளார்.

அடுத்து, ஆளுநர் ஆர். என் ரவி தொடக்கத்தில் மட்டும் தமிழ்நாடு என்று கூறிவிட்டு கடைசி கட்டங்களில் தமிழ்நாடு என்று சொல்லாமல் இந்த அரசு என்று கூறியுள்ளார்.

மற்றொன்று, ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார்.
தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயல் தவிர வேறில்லை. ஆளுநர் தன் உரையை முடித்துக்கொண்டு தேசிய கீதம் கூட பாடமல்  கிளம்பிச் சென்றிருக்கிறார் என்பது திராவிட மாடல் வார்த்தையின் மீது அவருக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதான்.

ஆளுநருக்கு முன்பாகவே அவரின் பேச்சை நிராகரித்து உடனே தீர்மானம் நிறைவேற்றி, அதை வெற்றிபெறவும் வைத்தார் முதல்வர். இதனால் சபாநாயகரும் உடனடியாக அரசு எழுதிய உரையை அவை குறிப்பில் பதிவு செய்தார்.

ஆளுநர் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நீட் விலக்கு மசோதாவில்  ஆரம்பித்தது மோதல் போக்கு. ஆளுநர் விளக்கம் கேட்டு இந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். இதனால் ஆளுநரின் டீ பார்ட்டியை திமுக கூட்டணி மொத்தமாக புறக்கணித்ததன் விளைவாக  ஆளுநர் இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பினார்.

அடுத்து, ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநருக்கும் - முதல்வருக்கும் மோதல் ஏற்பட்டது.

திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் ஆர். என் ரவியை மிக கடுமையாக விமர்சனம் செய்த போதிலும் , திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநரை எதிர்த்து கடுமையான விமர்சனங்கள் வெளியானபோதிலும் ஆளுநருக்கு உரிய கண்ணியத்தை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தே வருகிறார்.

ஆளுநருக்கும் - முதல்வருக்கும் இடையில்  மோதல் வெடிப்பது இது முதல் முறை இல்லை.  மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுதும் முதல் முறையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்னாள் ஆளுநர் சென்னாரெட்டி  மாநில விவகாரங்களில் தலையிடுகிறார் என்று ஜெயலலிதா அவரை எதிர்த்த சம்பவங்கள் உண்டு

  குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார். அதிமுக எம்எல்ஏக்களை  தேநீர் விருந்தை புறக்கணிக்கச் சொன்னார். ஜெயலலிதா சென்னா ரெட்டிக்கு பெரிய சிம்ம சொப்பனமாக விளங்கியது போலவே தற்போது முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். இந்தியாவின் ஆட்சி என்பது கூட்டாட்சி. இதில் மாநில உரிமைகளும் உள்ளன ஒன்றிய உரிமைகளும் உள்ளன.
மாநில உரிமைகளை மதிக்காமல் ஒன்றிய அரசின் நலன்களை மட்டுமே ஆளுநர்கள் தூக்கிப்பிடிப்பதும் அதை மாநில அரசுகளின் மீது திணிக்க முயற்சிப்பதும்தான் இது போன்ற முரண்பாடுகளுக்கு காரணமாகிறது. ஒரு மாநிலத்தில் இருக்கும் ஆளுநர் மாநில நலன்களைத் தான் முன்னிறுத்த வேண்டும்.



 


Comments