திப்பு சுல்தான் நாடக நூலுக்கு இடைக்கால்தடை!


 திப்பு சுல்தான் நாடக நூலுக்கு இடைக்கால்தடை!


வரலாற்றில் இருந்து எந்த வித ஆதாரமோ  அல்லது நியாயங்களோ   இல்லாமல் திப்பு சுல்தான் பற்றிய தவறான தகவல்கள் இருப்பதாக கூறி நூலுக்கு நீதிமன்றத்தில் தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மைசூரு சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளர்  திப்பு சுல்தான் பற்றிய தவறான தகவல்கள் இருப்பதாக கூறிய இந்த மனுவை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், திப்பு சுல்தான் புத்தகத்தின் விநியோகம் மற்றும் விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திப்பு நிஜ கனசுகளு' (திப்புவின் உண்மையான கனவுகள்) என்ற தலைப்பிலுள்ள நாடக வடிவிலான இந்த  புத்தகத்தை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து அதன் ஆசிரியர், வெளியீட்டாளர் அயோத்தி பப்ளிகேஷன் மற்றும் பிரிண்டர் ராஷ்ட்ரோத்தனா முத்ரானாலயா ஆகியோருக்கு கடந்த நவம்பர் 22  அன்று நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இந்நூல்  கன்னட மொழியில் கர்நாடகாவின் மிகவும் விரும்பப்படும் நாடகத் தொகுப்பான ரங்கயானாவின் இயக்குனரான  சி. கரியப்பாவால் எழுதப்பட்டுள்ளது.

இந்த மனுவை மாவட்ட வக்ப் வாரிய கமிட்டியின் முன்னாள் தலைவர் பி.எஸ்.  ரஃபியுல்லா தாக்கல் செய்திருக்கறார்.

முஸ்லீம் சமூகத்தின் மத வழிபாட்டு நடைமுறையான ‘அஸான்’(தொழுகைக்கு அழைக்கும் பாங்கு) முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தவறாக புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர்  ரஃபியுல்லா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நூலில்  பயன்படுத்தப்பட்டுள்ள துருக்கரு ( துலுக்கர்)என்ற வார்த்தை முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வார்த்தை என்றும் வாதிட்டுள்ள  அவர், புத்தகத்தை வெளியிடுவது அமைதியின்மை மற்றும் மத வேற்றுமையை ஏற்படுத்தும் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.  

இந்த நாடக நூல்  உண்மையான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டவை மற்றும் பள்ளி பாடப்புத்தகங்கள் மூலம் கற்பிக்கப்படுவது தவறானது என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

நாடகம் அடங்கிய புத்தகத்தை ஆய்வு செய்த நீதிமன்றம், “நூலின் முன்னுரையைப்
படித்தால், முன்னுரை எழுதியவரும் முகவுரை அல்லது அறிமுகவுரையில் நூலாசிரியரும்,  இது உண்மை மற்றும் துல்லியத்தை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறுவதைக் காட்டுகிறது.   இது, வரலாறு மற்றும் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்றும் திப்பு சுல்தானின் உண்மையான இயல்பை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என்றும் கூறப்படுள்ளது.

ஆனால மனுதாரரோ, நூலின் உள்ளடக்கங்கள் தவறானவை என்றும்  உண்மைகளைக் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

  “நாடக நூலின் உள்ளடக்கங்கள் தவறானவையாக மற்றும் அதில் திப்பு சுல்தான் பற்றிய தவறான தகவல்கள் இருந்தால், அது விநியோகிக்கப்பட்டால், அது மனுதாரருக்கு ஈடுசெய்ய முடியாத  இழப்பை ஏற்படுத்தும். அதோடு,   மத அமைதி மற்றும் நல்லிணக்கம் கெட வாய்ப்புகள் உள்ளன. பொது அமைதிக்கும. கூட ஆபத்து உள்ளது." என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பிரதிவாதிகளின்   புத்தகம் விநியோகிக்கப்பட்டால், மனுவின்  நோக்கமே வீணாகிவிடும்.  சர்ச்சைக்குரிய புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.  எனவே, இந்த கட்டத்தில், தடை உத்தரவை வழங்குவதில், வசதிக்கான சமநிலை வாதிக்கு சாதகமாக உள்ளது, ”என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நாடக நூலுக்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

அதே சமயம்,  “இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் நாடகம் நடத்தப்படும் என்பதில் எந்த அச்சமும் இல்லை.  எனவே, அதனை நிறுத்த  ஒரு தரப்பினருக்கு   உத்தரவு எதுவும் இந்த இடைக்கால உத்தரவில் வழங்கப்படவில்லை,'' என நீதிபதி தெரிவித்துள்ளார்.


பிரதிவாதிக்கு  இந்த மனு மீதான நோட்டீஸ் மற்றும்  சம்மன் அனுப்பிய நீதிமன்றம், வழக்கின் விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

-ஃபைஸ்

Comments