டிசம்பர் 6: கறுப்பு தினம என்று சொன்னதற்காக மாணவர்கள் மீது வழக்கு போட்ட போலீஸ்!


டிசம்பர் 6: கறுப்பு தினம என்று சொன்னதற்காக மாணவர்கள் மீது வழக்கு போட்ட போலீஸ்!



பாபர் மசூதி இடிக்கப்பட்ட 30 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 6 ஆம் தேதி வளாகத்திற்குள் நடத்திய கண்டன போராட்டத்திற்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது உத்தரப் பிரதேச காவல்துறை சனிக்கழமை பதிவு செய்துள்ளது.

இந்த நிகழ்வின் போது, ​​மாணவர்கள் டிசம்பர் 6 ஆம் தேதியை "கருப்பு தினம்" என்று பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இந்துத்துவா குழுக்களின் மிரட்டலுக்குப் பிறகு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது போலீஸ். இந்த வழக்கில் திங்கட்கிழமைக்குள்  கைது செய்யப்படாவிட்டால், அலிகார் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா
மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து போலீஸ் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

டிசம்பர் 7 அன்று, இந்துத்துவா அமைப்புகள் நகரில் ஒரு மகாபஞ்சாயத்தை நடத்தி முஸ்லீம் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

மாணவர்களால் உருவாக்கப்பட்ட பதாகைகள் மற்றும் பிரபல கஜல் கலைஞர் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸின் கஜலின் ' ஹம் தேகேங்கே' ( நாம் பார்ப்போம்)என்ற ஒரு குறிப்பிட்ட  வாசகத்தை பயன்படுத்தியதையும் இந்துத்துவா அமைப்புகள் பிரச்சினை ஆக்கியுள்ளன.

எஃப்.ஐ.ஆர் நகலின் படி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்), 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல்), 295-ஏ (மத உணர்வுகளைத் தூண்டும் செயல்கள்)     மற்றும் 298 (ஒருவரின்  மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் வார்த்தைகளை உச்சரித்தல் போன்றவை)


 
"நாங்கள் அன்று ஏற்பாடு செய்த மாணவர்களின் கூட்டம் ஆட்சேபனைக்குரியதல்ல.  மேலும் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. இந்த மாணவர் கூட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல.  6 டிசம்பர் 1992 அன்று, பாபர் மசூதி இடிப்பு மூலம் அரசியலமைப்பு கேலிக்குரியதாக்கப்பட்டது. இதையே நாங்கள் கூடி விவாதித்தோம்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை  மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் ஆதாரமற்றது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்." என்கிறார் வழக்கு போடப்பட்ட மாணவரான ஃபரீத்!

" நடந்துகொண்டிருக்கும் தேர்வுகளுக்கு நடுவே, தன் மீதான வழக்குகளால்  மனரீதியாகத் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் 24 வயது இறுதியாண்டு பிஏ பட்டதாரி மாணவரான ஃபரீத்!

வழக்கு பதிவு செய்யப்பட்ட மற்றொரு மாணவரான ( எம்.ஏ முதலாம் ஆண்டு மாணவர்)  சல்மான் கௌரி கூறுகையில், “எந்த மதத்தையும் புண்படுத்த நாங்கள் நினைத்ததில்லை.  இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நாங்கள் உறுதியாக ஆதரிக்கிறோம்." என்கிறார்.

மேலும், " நாங்கள் சதித்திட்டத்தின் கீழ் சிக்கியுள்ளோம்.   பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் விவாதம் நடத்த அனுமதி இல்லையா?" என்று கேட்கிறார் சல்மான்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் தாளாளர் வாசிம் அலி,  “டிசம்பர் 6 அன்று பல்கலைக்கழகத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை.  ஒருசில மாணவர்கள் மட்டும் கூடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.  மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் குறித்து மாவட்ட நிர்வாகம் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.  எங்களால் முடிந்த ஒத்துழைப்புடன் விசாரணையை எதிர்கொள்ள நாங்களும்  மாணவர்களும் தயாராக இருக்கிறோம்.   பல்கலைக்கழகத்தில் முழுமையான அமைதி நிலவுகிறது" என்கிறார்.


அலிகார் உதவி காவல் கண்காணிப்பாளர் குல்தீப் சிங் குணாவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட AMU மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும், அவதூறான கருத்துக்கள் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு புண்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும்  தெரிவித்துள்ளார். அதோடு, அவர், 
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 இன் கீழ் மாவட்ட நிரவாகம் தடை உத்தரவு  போட்டிருந்த நிலையிலும்  போராட்டம் தொடர்ந்தது என்று கூறியுள்ளார்.
.ஆயுதங்கள் இல்லாமல் அமைதியான முறையில்
பொதுவெளியில் மக்கள் கூடுவதற்கே அரசியல்சாசனம் அனுமதிக்கிறது. ஆனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே அமைதியான முறையில் கூடிய மாணவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் யோகியின் போலீஸ் வழக்குப போட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல, அரசியல சாசன சட்டத்தின் அவமதிப்புமாகும்.
-ஃபைஸ்


 

 

Comments