இந்தியாவின் பிரச்னை இல்லையா?கேள்வியெழுப்பிய உவைசி!
பல்கிஸ் பானு விவகாரம்
இந்தியாவின் பிரச்னை இல்லையா?
-கேள்வியெழுப்பிய உவைசி!
குஜராத்தின் வட்காமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசி, குஜராத் 2002 மிஸ்லிம் இனப்படுகொலையின் போது பல்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தினர் பலரை கொலை செய்த இந்துத்வா குண்டர்கள் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவாகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி மௌனம் சாதித்தது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவிடம் பல்கிஸ் பானு பற்றிய கருத்துகளை ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, அவர், ‘பல்கிஸ் பானு அல்ல, பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளைப் பற்றி பேசுவோம்.’ என்றார்.
பல்கிஸ் பானு முஸ்லிம் பிரச்சினையா? இது இந்தியாவின் பிரச்சினை, நீதியின் பிரச்சினை, பெண்களின் பிரச்சினை….” என பேசியிருக்கிறார் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த உவைசி.
தொடர்ந்து பேசிய உவைசி, “உங்களுக்கு இது பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் இன்றைய இந்திய அரசியலில், இந்திய முஸ்லிம்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. உங்கள் (முஸ்லிம்) வாக்குக்கு மதிப்பில்லை, ஏனென்றால் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பிஜேபிக்கு சமமானவர்கள். இந்தக் கட்சிகளுக்குத் தெரியும், தங்களுக்கென வாக்குகளைக் கேட்கத் தேவையில்லை, பாஜக/ஆர்எஸ்எஸ்-க்கு பயந்து முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று... பல்கிஸ் பானுவின் பிரச்சினை வந்தது அப்போது எல்லோரும் மௌனமாகி, ஊமையாகிவிட்டார்கள்”
என்றார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெறவும், அதன் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்வைக்கவும் பாரதீய ஜனதா கட்சி ,பொது சிவில் சட்டப் பிரச்சினையை எழுப்புகிறது என்றும்
இந்து கூட்டுக் குடும்பத்திற்கான (HUF)வருமான வரி சலுகைகளில் இருந்து முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை விலக்குவது சமத்துவக் கொள்கைக்கு எதிரானது அல்ல என்றும் உவைசி தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தை ஆளும் பாஜக அரசு, மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ் ஒரு குழுவை அமைக்கப் போவதாக உவைசி பேசுவதற்கு முந்தைய நாள் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
Comments
Post a Comment