ஆளுநருக்கு இது ஏற்புடையதல்ல!
ஆளுநருக்கு இது ஏற்புடையதல்ல!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, மாநிலங்களுக்கு ஆளுநர் தேவைதானா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். தமிழக ஆளுநரை விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அவர் ஆர்.என் ரவி அல்ல; ஆர்.எஸ்.எஸ் ரவி என தெரிவித்திருக்கிறார். டி.ராஜா எழுப்பியுள்ள கேள்வியும் திருமாவளவனின் கமன்டும் மிகைப்படுத்தல் அல்ல..
ஆளுநரின் நடவடிக்கை மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகளில் அவரது தலையீடுகள், தேவையற்ற கருத்துக்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.தனது பொறுப்பை மறந்து சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆளுநராகவே இருக்கிறார் ஆர்.என்.ரவி.

கேரளவின் ஆளநரான ஆரிஃப் முஹ்ம்மது கானுக்கு கொஞ்சமும் சளைத்தவரல்ல ரவி.கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசுக்கு கான் தொல்லை கொடுத்து வருவதால் அங்குள்ள அரசியல் கட்சித்தலைவர்களின் விமர்சனத்திற்கு அவர் ஆளாகி வருகிறார். சனாதன கோட்பாடுகளைத் தூக்கிப் பிடிக்கும் கான், கேரளாவில் உயர் கல்வியை காவிமயமாக் கும் நோக்கத்தோடு ஆர் எஸ்.எஸ் அமைப்பால் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதே சனாதனக் கொள்கை கோட்பாடுகளை தாங்கிப் பிடிப்பதோடு பொது நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தியும் வருகிறார் ஆளுநர் ரவி.
தமிழக அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சியால் கடுமையாக விமர்சிக்கப் பட்ட ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஆளங்கட்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளாலும் விமர்சிக்கப்படும் ஒரே ஆளுநராக இருக்கிறார் ரவி! சமீபத்தில், தலித்துகளை ஹரிஜன் என தடை செய்யப்பட்ட சொல்லை பயன்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது ஜாதிவெறிதான் என கொந்தளிக்கிறார்கள் தலித் தலைவர்கள்.
ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு 1982-ம் ஆண்டு தடை விதித்துவிட்டது. ஆதி திராவிடர்கள், பட்டியலின மக்கள், தலித்துகள் என்றே அழைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் திடீரென ஹரிஜன் என்ற சொல்லை ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கொழிந்து போன ஹரிஜன் என்ற வார்த்தையை உள்நோக்கம் இல்லாமல் ஆளுநர் சொன்னதாக கருதமுடியவில்லை ஆதிக்க சாதியினரின் வன்மமாகவே இதனை பார்க்க முடிகிறது.
ஆளுநர் பதவியில் இருந்து விலகிவிட்டு பாஜகவில் சேர்ந்து அவர் விரும்பியவாறு பேசட்டும் அப்போது அவர் எந்த கருத்தை வேண்டுமானாலும் . அதை எதிர்கொள்ளலாம். எச்.ராஜா, அண்ணாமலையின் கருத்துகளை எதிர்கொள்வதைப் போன்று.. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்ட பொறுப்பில் இருந்து கொண்டு ஆர்எஸ்.எஸ்- பாஜக தலைவர்களைப்போல சனாதனத்தை தூக்கி பிடிக்கும் கருத்துகளை ஆளுநர் சொல்வது ஏற்புடையதுமல்ல அது அவரது பதவிக்கு அழகுமல்ல..
Comments
Post a Comment