வெற்றிமாறனின் அழுத்தமான பேச்சு
வெற்றிமாறனின் அழுத்தமான பேச்சு!
சினிமாவில் பல அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன, இந்த அடையாளங்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்று விருது பெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் கடந்த அக் 1 ம் தேதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பியுமான திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் மணி விழாவையொட்டி, தமிழ் ஸ்டுடியோஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
![]() |
Vetrimaran |
விருது பெற்ற திரைப்பட இயக்குனரான வெற்றி மாறன். சோழப் பேரரசு பற்றிய வரலாற்றுப் பார்வையிலான கல்கியின் நாவலைத் தழுவி திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் வெளியான ஒரு நாளுக்குப் பிறகு வெற்றிமாறனின் கருத்துக்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
Raja Raja chozhan |
கடந்த காலத்தில் திருமாவளவனுடன் கலந்துரையாடியதையும் தனது பேச்சில் நினைவு படுத்திய வெற்றிமாறன், ‘ஒரு ஹீரோ மட்டும் தனியாக நின்று எப்படி சமூகத்தை மாற்றுகிறார் என்பதை உங்கள் படங்களில் காட்டுவதை தயவு செய்து நிறுத்துங்கள். எல்லா சினிமாக்காரர்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். ஒரு இயக்கத்தின் மூலம் மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் காட்டுங்கள். அது சிறப்பாக இருக்கும்’ என்று திருமாவளவன் கூறினார் என்றார் “கலை என்பது இயல்பாகவே அரசியல், ஆனால் திருமாவளவன் அதைவிட ஒரு படி மேலே சென்று நம்முடைய வாழ்க்கையே அரசியல். தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒரு குறிப்பிட்ட அரசியலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒருமுறை என்னிடம் சொன்னார் ‘ என்றும் அந்த மேடையில் திருமாவளவன் அறிவுறுத்தியதை நினைவு படுத்தியுள்ளார்.
"தமிழ் சினிமாவை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற நிலையில் இருப்பதற்கு காரணம் என்று கருதுகிறேன். இதேபோன்று வெளி மாநிலங்களில் இருந்து கலை ரீதியாக எந்த அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு தமிழ்நாடு இருக்கிறது. இதற்கும் திராவிட இயக்கங்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன்.
சினிமா என்பது வெகு மக்களை எளிமையாக சென்றடையக் கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது ரொம்ப ரொம்ப முக்கியம்.மக்களிடம் இருந்து விலகி எந்தக் கலையும் முழுமை அடையாது. ஏனென்றால் மக்களுக்காகத்தான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்தக் கலையை சரியாக இன்றைக்கு நாம் கையாள வேண்டும். இன்றைக்கு நாம் கையாளத் தவறினால் ரொம்ப சீக்கிரத்தில் நிறைய அடையாளங்களை இழக்க நேரிடும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்று சொல்வது இப்படிதொடர்ந்து அடையாளங்களை பறிப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்.
![]() |
Raja Mahendira Pratab Singh |
நாம் சுதந்திரத்திற்காகப் போராடப் போகிறோம் என்றால், நமக்கு அரசியல் தெளிவு தேவை. (தமிழகத்தில் அக் 02 அன்று 51 இடங்களில் நடக்கவிருந்த ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) ஊர்வலத்தை சிலேடையாகக் குறிப்பிட்டு) நாளை நடக்கவிருந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது என் பார்வையில், இதற்கான ஒரு சிறந்த உதாரணம், ” என்றெல்லாம் பேசியுள்ளார் வெற்றிமாறன்.
வெற்றி மாறனின் கருத்து ஏற்புடையது தான். தமிழ் திரைப்பட துறைக்கும், திராவிட இயக்கத்திற்கும், தமிழக அரசியலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருக்கிறது. திரைத்துறையின் வாயிலாக திராவிட இயக்கங்களின் கொள்கையான சாதிய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு , மொழிப்பற்று , மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம், பார்ப்பனிய எதிர்ப்பு முதலானவை தமிழ் மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சமூக மாற்றங்கள், மத நல்லிணக்க சூழல், மதச்சார்பின்மை, சமூக ஒற்றுமை, எதையும் பகுத்தறிவுக்கு உட்படுத்தும் பண்பு முதலானவை தமிழக மக்கள் மத்தியில் நிலவுவதற்கு தமிழ் திரையுலகமும் ஒரு காரணம் என்பதையும் அதற்கு திரைத்துறையை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்தது தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை!
இதற்கிடையில், “திருவள்ளுவர் உருவத்திற்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து மன்னராக சித்தரிப்பது என நமது அடையாளங்கள் மிக விரைவாக நம்மிடம் இருந்து பறிக்கப்படுகின்றன " என்ற கருத்தை வெற்றி மாறன் அழுத்தமாகப் பேசியிருப்பது ஹிந்துத்துவா தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி மாறனின் பேச்சுக்கு பிஜேபி உள்ளிட்ட ஹிந்துத்துவாக்கள் கொந்தளித்துள்ளன. வானதி ஸ்ரீனிவாசன், இயக்குனர் பேரரசு முதலானோர் எதிர் வினை ஆற்றியுள்ளனர்.
![]() |
Baba Saheb |
. "ராஜராஜசோழனை இந்துவாக மாற்றிவிட்டார்கள் என வெற்றிமாறன் கூறுகிறார். அப்படியென்றால் அவர் என்ன கிறிஸ்தவரா? இல்லை இஸ்லாமியரா?" எனக் கேட்டுள்ளார் பேரரசு. வானதி , "ராஜராஜ சோழனை இந்து இல்லை என்று வன்மத்தை கக்குகிறார் வெற்றி மாறன். தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை' என எதிர் வினை ஆற்றியுள்ளார் பிஜேபியும் ஆர் எஸ் எஸ் சும் சொல்லுகிற ஹிந்துவைத்தான் வெற்றிமாறன் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சமூகத்தின் அடையாளமாக இருக்கும் ஆளுமைகளை ஹிந்து(த்துவா) வட்டத்திற்குள் அடைப்பது பிஜேபி உள்ளிட்ட சங்பரிவாரங்களின் திட்டமாக இருந்து வருகிறது.
உத்திரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பிறந்த -மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை கொண்ட -சுதந்திர போராட்ட வீரரான ராஜா மஹேந்திர பிரதாப்பை ஹிந்துவாக சொந்தம் கொண்டாட முயற்சித்து அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறதுசங்பரிவாரம். ராஜா மகேந்திர பிரதாப் சுதந்திரபோராட்ட காலத்தில் இந்தியாவிற்கு வெளியே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்காலிக அரசை நிறுவி அதற்கு அவர் ஜனாதிபதியாகவும் சுதந்திர போராட்ட வீரரான மௌலவி பரக்கத்துல்லாஹ் பிரதமராகவும் இருந்தனர்.உ.பி மாநிலம் அலிகாரில் உள்ள உலகப் புகழ்பெற்ற அலிகர் பல்கலைக் கழகம் கட்ட தனது சொந்த நிலத்தை கொடுத்தவர் பிரதாப் சிங்.
1957 பொதுத்தேர்தலில் மதுரா மக்களவை தொகுதியில் சுயேட்சையாக நின்று இப்போதைய பிஜேபியின் அப்போதைய வடிவமான பாரதீய ஜன சங்கத்தின் வேட்பாளர் அடல் பிஹாரி வாஜ்பேயியை தோற்கடித்தவர் பிரதாப் சிங். ஜாட் சமூகம் கொண்டாடும் இந்த தலைவரை , அரசியல் ஆதாயத்திற்காக அந்த சமுதாயத்தை குறி வைத்து ஹிந்து தலைவராக அடையாளப்படுத்தி, ஜாட் சமூகத்தை தூண்டி விட்டு முஸாபர் நகரில் வரலாறு காணாத பெரும் கலவரத்தை உருவாக்கி உத்திரபிரதேச தேர்தலில் வெற்றியும் பெற்றதுபிஜேபி.
![]() |
Thiruvalluvar |
இதேபோலத்தான், பாபா சாஹேப் அம்பேத்கரை, திருவள்ளுவரை ஹிந்து என்ற வட்டத்திற்குள் அடைக்கப்பார்க்கிறார்கள். இந்த கோணத்திலிருந்து தான் வெற்றிமாறனின் பேச்சை புரிந்துகொள்ளவேண்டும். வெற்றி மாறனின் ராஜ ராஜ சோழன் பேச்சுக்கு எதிர் வினையாற்றுபவர்கள் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள் என்று அவர் சொன்னதற்கு பதில் சொல்லாமல் கள்ள மௌனம் காக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது
Comments
Post a Comment