காரைக்கால் : விநாயகர் கோவிலில் மதமாற்ற முயற்சியா? -ஹிந்து முன்னணியின் புகாரும் விளக்கம் தரும் சிறுத்தைகளும் !


காரைக்கால் :
விநாயகர் கோவிலில் மதமாற்ற முயற்சியா?
-ஹிந்து முன்னணியின் புகாரும் விளக்கம் தரும் சிறுத்தைகளும் !

 

காரைக்கால் மாவட்டம்  T.R  பட்டினம் வாஞ்சூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில்  உள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் கடந்த 05-10-2022 அன்று நாகூர் மொய்தீன் பள்ளி ஜமாஅத் நிர்வாகிகளும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் கூட்டாக சேர்ந்து மதமாற்ற கும்பலாக மாறி அத்து மீறி உள்ளே நுழைந்து ஹிந்துக்களை மூளைச் சலவை செய்து இஸ்லாமியராக மத மாற்றம் செய்யும் பொருட்டு குரான் மற்றும் இஸ்லாமிய நூல்களை உள்ளே வைத்து வழங்கியுள்ளனர். எனவே , ஹிந்து ஆலயத்தையே மதமாற்ற கூடாரமாக மாற்றிய ஜமாத்தார்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் மீது உரிய சட்டப்பிரிவின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்..

- இப்படி ஒரு புகார் மனு காரைக்கால் மாவட்ட காவல் அலுவலகத்தில் காரைக்கால் நகர ஹிந்து முன்னணி அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதி மற்றும் அதன் உள்ளடக்கம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருக்கிறது. நமது பார்வைக்கும் இந்த புகார் மனு வரவே அது குறித்து விசாரிக்கத் தொடங்கினோம். இந்த புகார் மனு அளிக்கப்பட்ட நாளிலிருந்து சுமார்  இரண்டு வாரங்களுக்கு முன் இரண்டு தனி நபர்களுக்கு மத்தியில் நடந்த சிறு தகராறு தான்  பிரச்சினையின் பின்னணியாக இருந்திருக்கிறது.

சமாதானக் கூட்டம்

 நாம் நாகூர் மொகிதீன் பள்ளி நிர்வாகி கொறடா சாதிக்கை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்றோம்.
"நாகூரைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர் ஒருவர் தனது பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப வாஞ்சூர் பெட்ரோல் பம்ப்பை நோக்கி செல்லும் போது சடாரென அவர் வளைய, அவருக்கு பின்னால் பைக்கில்  வந்த வாஞ்சூர் பகுதி தலித் சமூகத்தை  சேர்ந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் வாக்கு வாதம் ஆகியுள்ளது. தொடர்ந்து  அந்த தலித் இளைஞர் அலைபேசி மூலம் தனது  நண்பர்களை அழைக்க முஸ்லீம் இளைஞரை  அவர்கள் தாக்கிவிடுகின்றனர். இந்த தகவல் நாகூர் பகுதி இளைஞர்கள் சிலருக்கு தெரிய வர அவர்கள் தாக்கப்பட்ட  முஸ்லீம் இளைஞரை காரைக்கால் பொது மருத்துவமனையில் சேர்த்துவிட்டு காவல்துறையில்  புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்த போலீஸ் சாதாரண அடிதடி தகராறு என்பதால்  அன்றைய இரவே ஸ்டேஷன் பெயிலில் அவர்களை விடுவித்திருக்கிறது.

இஸ்லாமிய நூல்களை வழங்கும் ஜமாத்தினர்



இதனைத் தொடர்ந்து, நாகூரைச் சேர்ந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கன்னையன் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்கும் நோக்கத்தோடு நாகூர் மொஹிதீன் பள்ளி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினார். இரு தரப்பும் பேசித்தீர்க்க  ஒப்புக் கொண்ட நிலையில் இருதரப்பினரின் சொந்த வேலைகள் காரணமாக பேச்சுவார்த்தைக்கான அமர்வு தள்ளிப்  போனது . இதற்கிடையில் கடந்த  அக் 4 ம் தேதி  நாகூர் பகுதிக்கு வந்த ஒரு தலித் இளைஞரை  சில முஸ்லீம் இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதன் பிறகு பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மறுநாளே இரு தரப்பும் வாஞ்சூர் விநாயகர் கோவிலில் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினைக்கு சுமூகமாக முற்றுப்புள்ளி வைத்தோம்  இதில் மொஹிதீன் பள்ளி நிர்வாகிகள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்  மாவட்ட நிர்வாகிகள், காரைக்கால் ஜமாத் நிர்வாகிகள்  ஆகியோர் கலந்துக்கொண்டனர் " என்று நடந்த சம்பவத்தை சொன்னார்.

கொறடா சாதிக்



இதில் ஹிந்து முன்னணி அமைப்பு எப்படி சம்மந்தப்படுகிறது?  

சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட காரைக்கால் ஜமாத் நிர்வாகி அபு தர் நம்மிடம், "சமாதானக்  கூட்டங்கிறதால ஒரு பொது இடத்துல வச்சு பேசுறது தான முறையா இருக்கும். அதனால வாஞ்சூர்ல இருக்குற விநாயகர் கோவில்ல உக்காந்து பேசுவோம்னு வி சி க தோழர்கள் கூப்பிட்டாங்க. நாங்க சரின்னு சொன்னோம் . அப்பகூட, கோவில்ல நுழையுறதுக்கு முன்னாடி விசிக தோழர்கள் 'கோவிலுக்குள்ளே வர்றதுல  உங்களுக்கு நெருடலலோ சங்கடமோ இல்லையே ' னு கேட்டாங்க. .நாங்க அதெல்லாம் இல்லன்னு சொல்லி  கோவில் வராண்டால உக்காந்து பேசினோம்.

கணேஷ்

அங்கே அவர்கள் நல்லிணக்கத்தை நாடி பாபா சாஹேப் அம்பேத்கரை பற்றிய கருத்துக்களை சொன்னாங்க , நபிகள் நாயகம் சொன்ன சமூக நல்லிணக்க கருத்துக்களை நாங்களும் சொன்னோம். நமக்குள்ள பிரிவினை வேண்டாம்; இரு சமூகமும் ஒற்றுமையுணர்வோடு இருப்போம் என்றெல்லாம் சொன்னோம்.  அப்புறம் திருக்குரானையும் அறிவு சார்ந்த சில நூல்களையும் விசிக தோழர்களுக்கு வழங்கினோம். அவர்களும் அதை அன்போட வாங்கிக்கிட்டாங்க.  பிறகு எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். இவ்வளவு தங்க நடந்திச்சி. இதை தான் ஹிந்து முன்னணிகாரங்க மத மாற்றம் நடந்ததா  பெருசு படுத்துறங்க" என்று சமாதான கூட்டத்தில் நடந்ததை விவரித்தார். 

விடுதலைக் கனல்

 

தொடர்ந்து அவரே , " ஆரம்பத்துல நடந்த பெட்ரோல் பம்ப் சம்பவத்தை வச்சே  ஹிந்து முன்னணி காரங்க, 'நாகூரை சேர்ந்த முஸ்லிம்கள் ஹிந்து இளைஞரை அடித்து விட்டார்கள்' என்று பிரச்சினையை கிளப்பி இருந்தாங்க " என்றார்

 
கண்ணையன்



நாம் ஹிந்து முன்னணி தரப்பில் என்ன சொல்கிறார்கள் என அறிய ஹிந்து முன்னணி மாற்றும் பிஜேபியில் பொறுப்பில் இருப்பதாக சொல்லப்படும் சக்திவேல் உடையாரைத் தொடர்பு கொண்டோம்.
 'எந்த பத்திரிகை' என்று கேட்ட அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் "அதை மாவட்ட தலைவர்ட்ட கேளுங்க என்கிட்ட கேக்காதீங்க" என்றவர், " நீங்க நாகூர்ல இருந்து பேசுறீங்களா சென்னைல இருந்து பேசுறீங்களா? என் நம்பர் யாரு கொடுத்தா  உங்களுக்கு ? " என்றெல்லாம்  கேள்விகளை எழுப்பினார். சரி ஹிந்து முன்னணி நிர்வாகியோட தொடர்பு என் சொல்லுங்க  அவரிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றதும், "என் நம்பர் யாரு உங்களுக்கு  கொடுத்தாங்களோ  அவங்க கிட்டயே கேட்டுக்குங்க" என்று தொடர்பை துண்டித்தார்.

அபு தர்


நாம் ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகியான கணேஷிடம் பேசினோம். அவரும் எடுத்த எடுப்பிலேயே உங்களுக்கு இந்த நம்பர் யாரு கொடுத்தங்க என்றார். அவரிடம் ,  பத்திரிகைகாரங்களுக்கு பல சோர்ஸ்ல நம்பர் கிடைக்கும் சார். ரைட் பெர்சனைதானே ரீச் பண்ணியிருக்கோம்; நீங்க ஹிந்து முன்னணி நிர்வாகி தானே. என்ன நடந்துச்சுன்னு சொன்னீங்கன்னா அதையும் எழுதுவோம் என்றோம் ." அதான் சமூக வலைத்தளங்கள்ல தெளிவா போட்டுருக்கோமே" என்ற கணேஷிடம், சமூக வலைத்தளங்கள்ல இருக்கு. இருந்தாலும் சம்மந்தப்பட்டவங்க  கிட்ட கேட்டா  இன்னும் டீடைல் கிடைக்குமே சார் என்றதும்,  "குரானும் இஸ்லாமிய நூல்களும் கோவில்ல வச்சி கொடுத்து இருக்காங்க இது சரியா ? நான் பகவத் கீதையை ஒரு பள்ளிவாசல்ல வச்சி கொடுத்தா  ஏத்துப்பாங்களா? " என்றவரிடம், 'நல்லிணக்கத்தை நாடி பள்ளிவாசலல்ல கீதையை கொடுத்தா அது நல்லவிஷயம் தானே..நீங்க தாராளமா கொடுங்க சார்.. ட்ரை பண்ணுங்க .. ஆனா  சிறுத்தைகள் தானே கோவிலுக்குள்ளே முஸ்லிம்களை  கூப்பிட்டு இருக்காங்க ' என்றோம். அதற்கு,

 " நீங்களே  காரைக்கால்ல எந்த பள்ளிவாசல்லயாவது நாங்க கீதையை கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க."  என்றவர் தொடர்ந்து , "எதுவானாலும் ஒரு ஹிந்து கோவில்ல குரான் கொடுத்ததை நாங்க தெளிவா எதிர்க்கிறோம். சிறுத்தைகள்னு நீங்க சொல்லறீங்க. நாங்க அப்படி வார்த்தை பயன்படுத்துறது இல்ல. அவங்க ஹிந்துக்கள் இல்லாம வேற யாரு ? அங்க (கோவில்ல) வந்தவங்க ஹிந்துக்கள் தான். நாங்க ஹிந்துக்கள்ல பாகுபாடு பாக்குறது இல்ல ஹிந்துக்கள்னா எல்லோரும் ஒண்ணுதான். .குரானையோ இஸ்லாமிய நூல்களையோ ஒரு கோவில்ல கொடுக்காம வேற இடத்துல கொடுத்திருந்தா  நாங்க  கேக்க போறதில்ல. கோவில்ல வச்சு கொடுத்தது தான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துது. ஒரு கோவில்ல இவ்வளவு தைரியமா வந்து பண்றாங்களே அதனால தான்  சந்தேகம் ஏற்படுத்து. விநாயகர் கோவில்ல குரானையோ இஸ்லாமிய நூல்களையோ கொடுத்ததை எங்களால ஏத்துக்க முடியாது. நீங்க அப்படியே எழுதிக்கங்க" என்றார்  கணேஷ்!

இந்த சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என்ன சொல்கிறார்கள்? ?

சமாதானக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளரும் மாவட்ட நிர்வாகியுமான விடுதலைக்கு கனலிடம், 'கோவிலில் மத மாற்ற முயற்சி நடந்ததாக ஹிந்து முன்னணி சொல்கிறதே'  எனக் கேட்டோம்.

நம்மிடம் பேசிய விடுதலைகனல், "அவர்களுக்கு  வேற வேலை இல்லை சார்..ஒப்பான சொல்லப்போனா அவங்களுக்கு கொள்கையைச் சொல்லி பேச முடியாது. உண்மையை சொல்லப் போனா  அவங்களுக்கும் ( முஸ்லிம்கள்) கோவிலுக்குள்ளே வர தயக்கம் இல்ல; எங்களுக்கும் அவங்கள கோவிலுக்குள்ளே கூப்பிடுறதுல  சங்கடம் இல்ல. மனித நேய அடிப்படையில சமரசமா  நடந்த கூட்டம் அது. இதை ஹிந்து முன்னணியினர் திரித்து  பேசுறாங்க  ரெண்டு தனிநபர்களுக்குள்ள  ஒரு சின்ன தகராறு  இரண்டு தரப்புலயும் உரசல் வர்ற மாதிரி இருந்தது. இதை இப்படியே விட்டா நல்லா இருக்காதுன்னு  நாகூர் ஜமாத் காரங்க எங்க கட்சி  நாகூர் நிர்வாகி கிட்ட ரெண்டு தரப்பு தலைவர்களும் சந்திச்சு பேசணும்னு சொல்றாங்க. அங்க உள்ள எங்க நிர்வாகிங்க தொகுதி செயலாளர் என்ற முறைல அதை  என்கிட்டே சொன்னாங்க .இதை விட வேற என்ன வேலை.. நல்ல விஷயம் வாங்கனு நானும் போறேன்.நல்லிணக்கத்தை பற்றி முஸ்லிம்கள் பேசுறாங்க . நாம் ஒற்றுமையை இருக்க வேண்டிய தருணம் இதுனு நானும் பேசுறேன். ரெண்டு தரப்பும் கை  குலுக்குறோம். அவங்க குரானை கொடுக்குறாங்க... அதுவும் நான் தான் கேட்டேன். கேட்டு வாங்கி  ஒரு ஸ்டில் கூட எடுத்துகிட்டோம்,. இது தான்  நடந்தது. இதை வச்சி ஹிந்து முன்னணி காரங்க அரசியல் பண்றாங்க."என படபட வென பேசிய கனல் , தொடர்ந்து,

 " ஏங்க பிள்ளையார் கோவிலுக்குள்ளே அவங்க ( முஸ்லிம்கள் )  வர்றதுக்கே ஒரு மனசு வேணுமேங்க..கோவிலுக்குள்ளே வாங்கன்னு கூப்பிடத்தே நாங்க  தான் .ஊர்ல பொது விஷயத்தை உக்காந்து பேசுற இடம் தான் அந்த கோவில். நான் சொல்றேங்க..  குரானை வாங்குன நான் ஹிந்துவே இல்லைங்க.நான் ஹிந்துன்னா இவங்க என்ன எங்க வச்சிருக்காங்க? கோவிலுக்குள்ள-கோவில் கருவறைக்குள்ள  என்ன விட சொல்லுங்க பாப்போம்? பொண்ணு கொடுக்க சொல்லுங்க எனக்கு? என் வீட்ல பொண்ணு எடுக்க சொல்லுங்க ? இவங்க என்ன என்னை ஹிந்துன்னு சொல்றது..நான் ஹிந்துவே இல்லைங்க! "  என்றார் கனல் தெறிக்க..

இறுதியாக ஹிந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் காரைக்கால் எஸ் எஸ் பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் குறித்து கேட்டோம், நம்மிடம் பேசிய சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் , " அப்படி மதமாற்ற முயற்சி நடந்ததா என்று விசாரிக்க சொல்லியிருக்கிறார்கள் சார் " என்று மட்டும் சொன்னார்.

புகார் அளித்த  ஜமாத்தினரும் சிறுத்தைகளும் 



ஹிந்து முன்னணியினரைத் தொடர்ந்து,மொஹிதீன் பள்ளி ஜமாஅத் , காரைக்கால் ஜமாஅத் , விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒரு குழுவாக கடந்த அக் 10  ம் தேதி காரைக்கால் மாவட்ட காவல் அலுவலகம் சென்று ஹிந்து முன்னணியினர் மதப்பதட்டத்தை உருவாக்குவதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் அளித்துள்ளனர்.

 புகார் அளித்த ஹிந்து முன்னணியினர்


பொதுவாக சமூக வலைத்தளங்களில் மனம் போன போக்கில் பதிவு செய்யப்படும் பெரும்பாலான  செய்திகள் வதந்தியாவே இருக்கின்றன. சமூகப் பொறுப்பில்லாமல் பதிவேற்றம் செய்யப்படும்  பதிவுகள் மதப்பதட்டத்திற்கு , வகுப்பு வன்முறைகளுக்கு காரணமாகின்றன என காவல்துறையும் மனித உரிமை அமைப்புகளும் சொல்லி வருகின்றன. பாகிஸ்தான்  மற்றும் வங்க தேசத்தில் நடந்த  விரும்பத்தகாத சம்பவங்கள் கூட இந்தியாவில் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வட இந்தியாவின் சில மாநிலங்களில்  கலவரம் ஏற்பட்ட நிகழ்வுகள் உண்டு.இது போன்ற வகுப்பு பதட்டத்தை ஏற்படுத்தும் பதிவுகளை யார் பதிவேற்றம் செய்தாலும்  அவை  உடனடியாக அகற்றப்படவேண்டும். எல்லா சமயத்திலும் நல்லவர்கள் இருப்பதைப்போல் சில விஷமிகளும் உண்டு. அவர்களால் ஒட்டு மொத்த சமூகம் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

வாஞ்சூர் சம்பவத்திலும் ஹிந்து முன்னணி தோழர்கள் நடந்த சம்பவத்தை தீர விசாரித்திருக்கலாம் அல்லது காவல்துறையில் புகார் அளித்ததோடு நிறுத்திக்  கொண்டு  சமூக வலைதள பதிவுகளை தவிர்த்திருக்கலாம் என்று தான் நமக்கு சொல்லத்  தோன்றுகிறது!


-பைசல்
 

Comments