தவறாக பயன்படுத்தப் படும் யு ஏ பி ஏ சட்டம்! ஹத்ராஸ் வழக்கில் பிணை வழங்கிய நீதிமன்றம்

 தவறாக பயன்படுத்தப் படும்
யு ஏ பி ஏ சட்டம்!
-ஹத்ராஸ் வழக்கில் பிணை வழங்கிய நீதிமன்றம்


புஷ்ரா ஆலம்… 30 வயதான முஹம்மது ஆலமீன் மனைவி. அவர் கணவனிடமிருந்து வரும் 5 நிமிட போன் காலுக்காக கடந்த இரண்டு வருடங்களாக தினமும் காத்திருப்பார். ஹத்ராஸ் சதித்திட்ட வழக்கில் (யுஏபிஏ சட்டத்தின் கீழ்) கைது செய்யப்பட்டு லக்னோ மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் ஆலம். 5 நிமிட நேரத்தில் தம்பதியர் இருவரும் போன் கால் மூலம் மகிழ்ச்சிகளையும் குடும்ப விஷயங்களையும்  பரிமாறிக்கொள்ள முடிந்தது.



டிரைவரான முஹம்மது ஆலம் கடந்த  2020  அக்டோபர் மாதம் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸுக்கு சவாரி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. உ.பி.போலீசாரால் கைது செய்யப்பட்டு, யுஏபிஏ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

செப்டம்பர் 14, 2020ல் தலித் சமூகத்தைச் சார்ந்த 19 வயது இளம்பெண் உயர்சாதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாள். இது உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ்மாவட்டத்தில் நடந்ததால் ‘ஹத்ராஸ்’ வழக்கு என பிரபலமாக அறியப்படுகிறது. தேசிய அளவில் பெரும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்திய -இன்று வரை பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள பிரபலமான  வழக்கு இது.

யுஏபிஏ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டிருந்த முஹம்மத் ஆலமிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி, அலஹாபாத் நீதிமன்றம்  பிணை வழங்கியிருந்தது. மேலும், குற்றச்சாட்டுக்குரிய எந்த ஆதாரத்தையும் அவரிடமிருந்து போலீஸ் கைப்பற்றவில்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களில் முதலில் பிணை பெறும் நபர் இவரே. ஆனாலும் அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு  போட்டிருப்பதால்  இன்னும் அவர் விடுதலையாகவில்லை.

Mohamed Alam with
Bushra



யுஏபிஏ சட்டத்தின் கீழ் மூன்று நபர்களோடு ஆலமும் கைது செய்யப்பட்டிருந்தார். இவர்களில் முக்கியமானவர் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான சித்திக் கப்பன். (இவரது வழக்கும் அரசியல்
அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் வழக்குதான். இன்று வரை பரபரப் பாகவே பேசப்பட்டு வருகிறது ) இன்னொருவர் கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா என்கிற , இப்போது தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாணவர் பிரிவின்    நிர்வாகியான அத்திக்குர் ரஹ்மான் மற்றொருவர்  மசூத் அஹ்மத் ஆகியோர்,(  அத்திக்குர் ரஹ்மான்  கைதை வைத்துதான், இப்போது பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீதான ரெய்டுக்குப் பின்னர் கேரளாவின் என் ஐ ஏ நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த ரிமாண்ட்  ரிப்போர்ட்டில், பாப்புலர் பிரண்ட் அரபு நாடுகளிலிருந்து நிதி திரட்டியதாகவும் அதை ஹத்ராஸ் சம்பவத்தில் பயன்படுத்தியதாகவும் , தில்லி 2020 கலவரத்திற்கு பயன்படுத்தியதாகவும் அது சுட்டிக்காட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது )

. தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கவும் தேசம் தழுவிய பிரச்னையாக இது உருவெடுத்திருந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லவும் ஹத்ராஸ் சென்று கொண்டிருந்த நிலையில் தான் மேற்கண்ட நால்வரையும் உ.பி.
போலீஸார் கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்  கடந்த செப் 12 ம் தேதி  சித்திக் கப்பனுக்கு உச்சநீதி மன்றம் பிணை வழங்கியது இருப்பினும் அவர் மீதும்  அமலாக்கத்துறை வழக்கு போட்டிருப்பதால் அவரும்  இன்னும் சிறையில் இருக்கிறார் கப்பனுக்கு பிணை வழங்கும் போது, “ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கு உரிமை உள்ளது” என தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது நீதிமன்றம்.  

அல்லஹாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கிய பின்பும், ஆலம்
விடுதலையாகாததற்குக் காரணம், சில மாதங்களுக்கு முன் PMLA (prevention of money lauendering Act) என்கிற பண மோசடி விவகாரத்தில் ஆலம் மீது அமலாக்கத்துறையால்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் யுஏபிஏ வழக்கில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய போதும் அவர் இந்த அமலாக்கத் துறையின் வழக்கு காரணமாக விடுதலையாக முடியவில்லை என
ஆலமின் வழக்கறிஞர் சைஃபான் ஷேக் கூறுகிறார்.

“பிணை கிடைத்துவிட்ட செய்தி அறிந்தவுடன் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது மீண்டும் நாங்கள் ஒன்று சேருவோம் என்று. கடவுளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் நான் பலமுறை நன்றி கூறினேன். ஆனால், என் கணவரை விடுவிக்க மீண்டும் அவர்கள் நேரம் எடுக்கிறார்கள்” என்கிறார் ஆலமின் மனைவி  புஷ்ரா.

Hathras Gang Raped and victim set fire


 யுஏபிஏ வழக்கில் குற்றப்பத்திரிகை 5 ஆயிரம் பக்கங்களைத் தாண்டி நீள்கிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அது இன்னும் வழங்கப்படவில்லை என்கிறார் ஆலமின்  வழக்கறிஞர்  சைஃபான் ஷேக்.
 

 "யுஏபிஏ என்பது ஒரு கொடூரமான சட்டம்" எனச் சொல்லுகிற வழக்கறிஞர், "அதன் பிரிவு 43டி மற்றும் உட்பிரிவு 5 இலகுவாக பிணை கிடைப்பதற்கு தடையாக உள்ளது. அரசுத் தரப்பு பிரைமாஃபேசி ஆதாரங்களை நிரூபித்தால் நீதிமன்றம் ஒப்புக்கொள்ளும். பிறகு பிணை கிடைப்பது மிகவும் கடினம். இருப்பினும் ஆலம் வழக்கில் வழக்கறிஞர்கள் அதனை
சாதித்திருக்கிறார்கள். ஆனால், அமலாக்கத்துறை வழக்கு இப்போது தடையாக இருக்கிறது" என்கிறார்

புஷ்ரா தொடர்ந்து ஒன்றை வலியுறுத்துகிறார். இந்த வழக்கில் ஆலம் எந்த வகையிலும் தொடர்பு கொண்டவர் இல்லை. அவரோடு கைது செய்யப் பட்டவர்களை அவர் இதற்கு முன்பு பார்த்தவரும் இல்லை. அவர் ஒரு கேப் டிரைவர் மட்டுமே. அவர் எங்கு வேண்டுமானாலும் சவாரிக்குச் செல்வார். ஆனால், இந்த சவாரியால் (ஹத்ராஸ்) அவருக்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டி வரும் என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
யுஏபிஏ சட்டத்தின் கீழ் ஆலம் மீது குற்றம் சுமத்தப்படுவதற்கு முன் முறையான- சரியான விசாரணை நடத்தப்படவில்லை "என்கிறார்

 மேலும் ,  “அவர்கள் எதையாவது கண்டுபிடித்திருந்தால் அல்லது ஆதாரத்தைத் திரட்டியிருந்தால் என் கணவர் அதில்சம்மந்தப்பட்டிருக்கிறார் என்ற  உண்மையாக வெளிப்பட்டிருக்கும். ஆனால், போலீஸ்
பலவிதமான கதைகளை ஜோடித்து இரண்டு வருடம் வரை அவரை சிறையில்
வைத்திருந்தது" என்கிறார் புஷ்ரா.

ஆலம் தனது ‘கேப்’ மூலம் ஒரு நாளைக்கு 200 முதல் 500 ரூபாய் வரை சம்பாதித்து வந்த தொழிலாளி. அது கூட, சவாரி மற்றும் அவர் செல்லும் இடங்களைப் பொறுத்துதான் வருமானமே! தில்லியில் கடந்த 10- 12 வருடங்களாக டிரைவராக வேலை செய்து வருகிறார் ஆலம்.

புஷ்ராவைப் போலவே ஆலமின் மூத்த சகோதரரான சொஹைப் கானும், “ஆலமிடம் மறைக்க ஒன்றுமில்லை என்பதால் அமலாக்கத்துறையின் (PMLA) வழக்கு ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்” என்கிறார்.


Siddiq Kappan with wife



“ஆலம் பணத்தை பதுக்கி வைத்திருந்து அதிலிருந்து புதிய காரை வாங்கினார் என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அது சாத்தியமே இல்லை. அவர் ஒரு டிரைவர்.லாக்டவுன் காலத்தில் அவரிடம் கொஞ்சம் போல பணம் இருந்தது. அவர் எப்படி சொந்தமாக கார் வாங்க முடியும்? இது குறித்த ஆதாரத்தை நீதிபதி விசாரணையின் போது கேட்டிருந்தார். ஆனால், போலீஸிடம் இதற்கு பதிலில்லை” என்கிறார் சொஹைப்கான்.

ஆனால், புஷ்ராவும், சொஹைப்பும் -அந்தக் காரை ஆலம் கைதாவதற்கு சில
வாரங்களுக்கு முன்பு தான் அவரது உறவினர் ஒருவரிடமிருந்து வாங்கியிருந்தார். அவரது உறவினர் தான் இருந்த காருக்கான பெர்மிட்டை வாங்கித் தந்துள்ளார். அதில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை காருக்கான தவணை தொகையாக உறவினருக்கு கொடுத்து விட வேண்டும் என அவர்களுக்குள் முடிவானது என்கிறார்கள்.

“தொழில்நுட்ப வளர்ச்சி கண்டிருக்கும் இன்றைய காலத்தில் ஒருவருடைய சுய விவரத்தை ஒரு ஆதார் கார்டு கொடுத்து விடும். பிறகு ஏன் மாநில அரசு ஆலம் விஷயத்தில் இதனை சோதித்துப் பார்க்கவில்லை?” என நியாயமான கேள்வியை எழுப்பும் சொஹைப் கான், “ஆலத்திற்கு வேறு வேலையும் இல்லை. வேறு வங்கிக் கணக்குமில்லை. அல்லது வேறுசைடு பிசினஸும் இல்லை. இந்த வழக்கின் துவக்கத்திலிருந்தே ஆலமை ஒரு டிரைவராகவே போலீஸ் காட்டவில்லை. தமது சொந்தக் கட்டுக்கதையையே அவர்கள்
சொல்லி வருகிறார்கள்” என்றும் சொல்கிறார்.

அக்டோபர் 5, 2020, பல குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்த நாள். அதில் ஆலமின் குடும்பமும் ஒன்று. அந்த தொடர் நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறார் புஷ்ரா, அன்றைய தினம் ஆலம் வழக்கமாக வேலைக்குச் சென்றார் . காலையில் இரண்டு சவாரிகளை முடித்திருந்தார். ஹத்ராஸ் சவாரி வந்தவுடன் அது குறித்து தனது மனைவிபுஷ்ராவிற்கு தகவல் கொடுத்திருக்கிறார். வெகுநேரமாகியும் கணவர் வீடு திரும்பாததால்
புஷ்ரா பலமுறை கணவரை தொடர்பு கொண்டு சோர்ந்து போனார் . கணவர் தொடர்பில் வரவில்லை. தனது குடும்பத்தினரின் உதவியை நாடியுள்ளார் புஷ்ரா. மறுநாள் மதியம்புஷ்ராவை தொடர்பு கொண்ட ஆலம், உ.பி மாநிலம் மதுரா சுங்கச்சாவடியில், தானும், சித்திக்கப்பன் மற்றும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்பதாகவும் கூறியுள்ளார்.

"பின்னர் அவர்கள் ‘மன்த்’ காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் அடுத்த நாள் விடுவிக்கப்படுவீர்கள் என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதற்குப்பின் உடனடியாக அவர்கள் மீது யுஏபிஏ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்கிறார் புஷ்ரா.

“நான் எவ்வளவு பரிதாபகரமாக இருந்தேன் என்பதை நீங்கள் கற்பனை செய்து கூடபார்க்க முடியாது. எவ்வளவு கஷ்டமாக அந்த சூழ்நிலையில் நான் இருந்தேன், டிவியில் வந்த செய்திகள் அந்த சூழலை எதிர்கொள்ள எங்கள் குடும்பத்திற்கு கடினமாக்கியது.என்ன நடந்தது என்பது பற்றிய செய்திகள் மற்றும் கைதுகள் அபத்தமானவையாக இருந்தன. திகிலூட்டும் வகையிலும் இருந்தன. அழுகையை என்னால் நிறுத்த முடியாவில்லை. கைது செய்யப்பட்ட இவர்கள் கலவரத்தை ஏற்படுத்த சென்றார்கள் என்றும் அவர்களை பயங்கரவாதிகள் என்றும் செய்திகள் சித்தரித்தன. அதோடு, ஆலம் தனது வங்கிக் கணக்கில் 2 கோடி ரூபாய் வைத்திருப்பதாக செய்திகளில்
சொன்னது முற்றிலும் பொய்யானவை. எங்களது அன்றாட வேலைகளை செய்யவே கஷ்டப்பட்டோம். தெரிந்தவர்களிடம் கடன் வாங்க வேண்டியிருந்தது” என்கிறார் புஷரா.

“அவர்கள் கைது செய்யப்பட்டபோது மீடியாக்கள் கட்டுக்கதைகளை செய்திகளாக வெளியிட்டன. அக்டோபர் 4ம் தேதி, ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான கருத்துக்கள் மற்றும் சீற்றங்கள் உ.பி அரசின் இமேஜை குறைப்பதாகக் கூறி அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸ் ஏற்கனவே எஃப்ஐஆர் போட்டிருந்தது. அதை சரிக்கட்ட இவர்கள் பலி ஆடுகளாக்கப்பட்டனர்" என்கிறார் வழக்கறிஞர் சைஃபான் மேலும், “இவை, தலித் இளம்பெண்ணுக்கு எதிரான அட்டூழியத்தை திசை திருப்பவும் நிஜத்தை மறைக்கவும் செய்யப்பட்டவை” என்றும் அவர் சொல்கிறார்.

2020ல், யுஏபிஏ சட்டத்தின் கீழ் 361 பேர் கைது செய்யப்பட்டனர். அதற்கு முந்தைய 2021ல் 83 பேர் யுஏபிஏவில் கைது செய்யப்பட்டனர் என உத்திரப்பிரதேச மாநிலம் குறித்து தரவுகளை வெளியிட்டிருக்கிறது தேசிய குற்றப்பதிவுத்துறை.

"ஆலமின் வழக்கில் இபிகோ பிரிவு 151 (அறியக்கூடிய குற்றங்களைத் தடுப்பதற்கான கைது), பிரிவு 107 (ஏனைய சந்தர்ப்பங்களில் அமைதியை நிலை நிறுத்த பாதுகாப்பு) பிரிவு 116 (தகவலின் உண்மைத்தன்மை பற்றிய விசாரணை) ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன . அக்டோபர் 6 அன்று எஸ்டிஎம் நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கான சூரிட்டி குறித்து கேட்கப்பட்டது. ஆனால், அது அவர்களால் முடியாமல் போனது.  எஃப்.ஐ. ஆரில் இபிகோ பிரிவு 295 ஏ (மத உணர்வுகளைத் தூண்டி விடுதல்), 153 ஏ (மத அடிப்படையில் இரு குழுக்களுக்கு மத்தியில் பகைமையை உருவாக்குதல்), 124ஏ (தேசத் துரோகம்) மற்றும் யுஏபிஏ சட்டத்தின் பிரிவுகள் 17 (பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி திரட்டுவதற்கான தண்டனை), 18 (சதித்திட்டத்திற்கான தண்டனை), ஐ.டி சட்டத்தின் பிரிவுகள் 65 (கணினி தொடர்பான ஆவணங்களை அழித்தல் அல்லது சேதப்படுத்துதல்),
பிரிவு 72 (கிடைத்த தகவல்களை வெளிப்படுத்துதல்), 75 (இந்தியாவிற்கு வெளியே மேற்கொள்ளும் குற்றங்கள் அல்லது சட்ட மீறல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்கிறார் வழக்கறிஞர்.

பின்னர் ஆலம், ரிமாண்ட்டுக்காக மதுரா  நீதிமன்றத்திற்கு அழைத்துச்
செல்லப்பட்டிருக்கிறார். சில நாட்களுக்குப் பின் இந்த வழக்கு  STP (Special
Task Force) யிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஐ.டி சட்டப்பிரிவு 72ஐ நீக்கிவிட்டு 12 பி பிரிவை (இந்தியாவிற்கு வெளியே ஒருவர் செய்யும் குற்றம்) சேர்த்துள்ளனர்.

 பாதுகாப்பு அமைப்புகள் சில நேரம் மதவெறுப்பினாலும், சில சமயம் ஃபாசிச ஆட்சியாளர்களை திருப்திப்படுத்த அல்லது அவர்களின் உத்தரவை அப்படியே நிறைவேற்ற இது போன்ற பொய்
 

வழக்குகளை முஸ்லிம் இளைஞர்கள் மீது பதிவு செய்கின்றனர். என்பததைத் தவிர வேறென்ன சொல்ல !
-அபு


Comments