துர்கா தேவி சிலை ஊர்வலம் : முஸ்லிம்களின் வீடுகளை எரித்த ஹிந்துத்துவாவினர் !

துர்கா தேவி சிலை ஊர்வலம் :
முஸ்லிம்களின் வீடுகளை எரித்த ஹிந்துத்துவாவினர் !


உத்திரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள, இப்ராஹிம்பூர் கிராமத்தில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது, ஒரு மஸ்ஜித் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஹிந்துத்வா சாமியாரான அஜய்குமார் பிஷ்த் என்கிற யோகி ஆதித்யானந்த் ஆட்சி செய்து வரும் மாநிலத்தில் முஸ்லிம் சமூகம் தினமும் அச்ச சூழலுக்குள் தான் வாழ்ந்து வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த விஜயதசமி விழாவை முன்னிட்டு, சுல்தான்பூரில்
இந்துத்வாவினர் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தை (நம்மூர் விநாயகர் சதுர்த்தி போல) முன்னெடுத்தனர். முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கின்ற இப்ராஹிம்பூர் கிராமம் வழியாக ஊர்வலம் சென்ற இந்துத்வா கும்பல் கைகளில் வாட்கள் மற்றும் கொடூர ஆயுதங்களை ஏந்தி இருந்தது. இப்ராஹிம்பூர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்த
கும்பல் அவர்களின் வீடுகளையும் தீக்கிரையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்வா குண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அல்லது குறைந்தபட்சம் வன்முறைத் தாக்குதல்களை கட்டுப்படுத்த முயற்சிக்காத பாதுகாப்புப் போலீசார், வன்முறைக் கும்பலுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம் வீடுகளைத் தாக்கி, பெறுமதியான பொருட்களை, பணத்தை சூறையாடிச் சென்றதாக அப்பகுதி முஸ்லிம்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

முஸ்லிம்களை கைது செய்த போலீசார்

Durga Devi procession

 உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் முஸ்லிம்களுக்கு  எதிராக  வெறுப்பூட்டும் உரையை நிகழ்த்தியதாகவும், இந்துத்வா கும்பலை வன்முறையில் ஈடுபடத் தூண்டியதாகவும் உள்ளூர் முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்துத்வா வன்முறை கும்பலின் தாக்குதலில் முஸ்லிம்கள் காயமடைந்திருந்த நிலையில், எஃப்.ஐ.ஆரில் 50 முஸ்லிம்கள் மீதும் ஒரு ஹிந்து மீதும் (அவர் அநேகமாக தலித் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார்) வழக்கு பதிவு செய்துள்ளது. போலீஸ் எஃப்ஐஆரில் கண்டுள்ளபடி 32 முஸ்லிம்களை அவர்கள் (கடந்த அக்.14ம் தேதி வரை) கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களில் ஒருவரான இஷ்ரத் ஜஹான் என்பவர், இந்துத்வாவினர் தனது வீட்டிற்கு தீ வைத்ததாக மீடியாக்களிடம் தெரிவித்திருக்கிறார். மூன்று

குழந்தைகளுக்கு தாயாக இருக்கின்ற விதவைப் பெண்மணியான இஷ்ரத் ஜஹான், போலீஸ் முன்னிலையிலேயே இந்துத்வா குண்டர்களால் தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதாக போலீஸ் மீது குற்றம் சாட்டுகிறார்.
“எல்லாவற்றையும் சூறையாடினார்கள். நாங்கள் மூன்று நாட்களாக பட்டினி கிடந்தோம். அவர்கள் தீ வைத்ததற்கான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டனர். முஸ்லிம் ஆண்களை தேடி போலீஸார் எங்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் அல்ல, எல்லோரும் அண்டை வீட்டாரே. இவர்கள் அனைவரையும் பெயர் குறிப்பிட்டு என்னால் அடையாளம் காட்ட முடியும்” என்கிறார். அதோடு, “முஸ்லிம் ஆண்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை
கூறாததால் பெண்களின் ஆடைகளை போலீசார் வன்மமாக கிழித்தனர். நான்
அணிந்திருக்கின்ற ஆடை மற்றும் என் குழந்தைகள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர எல்லாமே நான் இழந்து நிற்கிறேன்” என கூறுகிறார் அந்த விதவைப் பெண்மணி.

வன்முறை உருவானது எப்படி?

கடந்த அக்டோபர் 10ம் தேதி மக்ரிப் (அந்திம) தொழுகைக்குப் பிறகு துர்கா சிலை கரைப்பு ஊர்வலம் தொடங்கப்பட்டது. சிலை கரைப்பதற்காக வந்தவர்கள் கைகளில் இரும்புக் கம்பிகள், லத்திகள் மற்றும் வாள்களுடன் வேறு கொடூரமான ஆயுதங்களும் இருந்தன. அவர்கள் வைத்திருந்த டிரக்கில் கற்குவியல் லோடு செய்யப்பட்டிருந்தது என்றும் தனது துயரமான அனுபவத்தை ‘இந்தியா டுமாரோ’ என்ற இணையதள ஊடகத்திடம் தெரிவித்துள்ளார், இஷ்ரத் ஜஹான்.

Stone pelting


இஷ்ரத் ஜஹானின் கூற்று, இந்த வன்முறை இந்துத்வாக்களால் திட்டமிட்டே
நடத்தப்பட்டிருக்கிறது என்பதேயே காட்டுகிறது. “ஊர்வலத்தின் போது துர்கா தேவி சிலையுடன் இந்துத்வாக்கள் அங்கிருந்த மஸ்ஜிதின் வாயிலை முற்றுகையிட்டுள்ளர். தொழுகைக்காக அங்கு வந்த முஸ்லிம்கள் வழிவிடுமாறு அவர்களிடம் மென்மையாகவே கூறியுள்ளனர். இன்னொருபுறம் இந்துத்வா கும்பலின் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். முதலில் அவர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த- முஸ்லிம்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள திருப்பி அடித்துள்ளனர். அதோடு, அந்த ஆயுத கும்பலிடமிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முஸ்லிம்கள் ஓடத்
தொடங்கினர்” என்றும் கூறுகிறார் எல்லாவற்றையும் நேரில் பார்த்த இஷ்ரத் ஜஹான்.

‘ஈத் மீலாது’ கொண்டாடுவதற்காக அங்கு அமைக்கப் பட்டிருந்த கொடிகளை, இந்த வன்முறை நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஹிந்துக்கள் அகற்றியுள்ளனர். ஆனாலும் முஸ்லிம்க.ள் தரப்பு இந்த அராஜகத்திற்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை, அமைதி காத்திருக்கிறார்கள்.

ஹிந்துத்துவா வெறியராக மாறிய இன்ஸ்பெக்டர் :

“வெறுப்புணர்வுப் பேச்சுக்களுடன் வன்முறை தொடர்ந்தது. முஸல்மானோ கோ மிட்டி மே மிலாதூங்கா (முஸ்லிம்களை மண்ணோடு மண்ணாக்கி விடுவேன்) என பல்தோராய் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்ரேந்திர பஹதூர் சிங் இந்துத்வா வெறியராக மாறி சொன்னபோது, கூடியிருந்த இந்துத்வா கும்பல் ஜெய் மாதா தி (துர்கா தேவிக்கே வெற்றி) மற்றும் ஜெய் ராம் (ராமருக்கே வெற்றி) என ஆரவாரம் செய்தனர். வன்முறைக் கும்பலின்
தீவைப்புச் சம்பவமும் காவல்துறையினரின் மிருகத்தனமும் அதன் பின்னரே துவங்கியது” என்கிறார் இஷ்ரத்.

இந்த கிராமம் பல்தோராய் காவல்நிலைய எல்லைக்குள் வருகிறது.
ஆக, வன்முறையைத் தடுக்க வேண்டிய- வன்முறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய- வன்முறை நிகழாமல் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய அரசு இயந்திரத்தின் ஒரு அதிகாரியான இன்ஸ்பெக்டரே வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்களுக்கு காரணமாகியிருக்கிறார் என்பது உத்திரப்பிரதேசத்தில் மட்டுமே நிகழும் சம்பவமாகும்.

இந்த வன்முறைத் தாக்குதலில் ஜமா மஸ்ஜித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. மஸ்ஜிதிற்கு  தீ வைத்து, உள்ளேயிருந்த புனித குர்ஆனின் பிரதிகளையும் அவர்கள் எரித்து விட்டதாக இஷ்ரத் கூறுகிறார்.

வன்முறையைத் தூண்டிய இன்ஸ்பெக்டர் :


துர்கா தேவி சிலையை கரைப்பதற்கு முன்பும் இன்ஸ்பெக்டர் அமரேந்திர பஹதூர் சிங், ஊர்வலத்தில் வரும்போதே வன்முறை தூண்டும் உரையாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. அதில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறித்தனமான வெறுப்புணர்வை அவர் வெளிப்படுத்தியுள்ளதை பார்க்க முடிகிறது.

“உன் கோ சுன் சுன் கர் மாருங்கா. உன் கே கர் புல்டோசர் சே கிரேங்கே” (முஸ்லிம்களை(அவர்களின் பெயர்) கேட்டு கேட்டு கொல்வேன், அவர்களின் வீடுகளை புல்டோசரால் இடித்துத் தள்ளுவேன்”என்று அந்த வீடியோவில்  வெறியோடு கத்துகிறார் இன்ஸ்பெக்டர்.

Security forces on petrol


இந்துத்வாவினரின் வன்முறை வெறியாட்டத்தை நேரில் பார்த்த இன்னொரு சாட்சியான 40 வயது ஷமீமா, தனக்கு நடந்த துயரத்தை சொல்லும்போதே உடைந்துபோய் அழுகிறார். அன்றைய தினம் அரசு இரவு சுமார் 10 மணியளவில் ஷமீமாவின் ஒரு அடுக்கு மாடி வீட்டை தீ வைத்து கொளுத்தியுள்ளது இந்துத்வா கும்பல். தாக்குதல் நடந்தபோது ஷமீமா தனது மகளுடன் தனியாக இருந்திருக்கிறார். வன்முறையாளர்களுக்கு பயந்து
தன்னையும் தனது மகளையும் காப்பாற்றிக்கொள்ள பின்வாசல் வழியே வெளியேறிதப்பியிருக்கிறார்.

“வன்முறைக் கும்பல் எல்லாவற்றையும் தீ வைத்துக் கொளுத்தியது. போலீசார்
வந்தபோது அவர்கள் வீட்டுக் கதவைப் பூட்டச் சொன்னார்கள். இரவு முழுவதும் என் வீடு என் கண் முன்னிலையிலேயே எரிந்துக் கொண்டிருந்தது. என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. உதவிக்கு வருவோரும் எவருமில்லை. எரிந்துக் கொண்டிருந்த வீடு,  காலையில்தான் அணைக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள்  தான். அவர்களுடன் எனக்கு சச்சரவு இருந்தது. எனக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வன்முறையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். எனது வீட்டிற்கு அவர்கள் தீ வைப்பதற்கு முன் என் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை அவர்கள்  கொள்ளையடித்தனர்” என்கிறார் ஷமீமா.

ஷமீமாவைப் போலவே, வன்முறையை நேரில் கண்ட இன்னொரு பெண்மணியான 45 வயது சஃபியுன்னிசாவின் வீடும் நாசமாக்கப் பட்டிருக்கிறது.  சஃபியுன்னிசாவையும்அவரது மகளையும் லத்தியால் கடுமையாக தாக்கிய கும்பல், வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளது. தாய்-மகள் இருவரை தாக்கிய வன்முறை கும்பலுடன் போலீசும் சேர்ந்துக் கொண்டது என்கிறார்  சஃபியுன்னிசா.

மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு :

ஜம்யிய்யத் உலமா யே ஹிந்த் அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரான மவ்லானா முத்தஹரூஸ் ஸலாம், “எஃப்.ஐ.ஆரில் 86 முஸ்லிம்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்களில் 36 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இப்ராஹிம் பூரில்  மொத்தம் 300 வீடுகள் உள்ளன. இவற்றில் நூறு முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன. கிராமத்தில் இருந்த முஸ்லிம் ஆண்கள் வன்முறை மற்றும் போலீஸின் அடக்குமுறையைத் தொடர்ந்து கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்” என்று கூறுகிறார். மேலும், முஸ்லிம் தரப்பிலிருந்து செய்யப்பட்ட புகார் தொடர்பாக ஒரு எஃப்.ஐ.ஆர் கூட போலீசார்
போடவில்லை. ஒருவர் கண்ணை இழந்துள்ளார், மற்றொருவருக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. வன்முறை கும்பலுக்கு எதிராக போலீஸில் புகார் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம்களை போலீஸ் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்துள்ளது. இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கை குறித்து நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம்” என்கிறார் மவ்லானா.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் விதத்தில் ஒரு காவல்துறை அதிகாரியே முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வுப் பேச்சை பேசியிருப்பது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறுகிறார் மவ்லானா. மேலும், மவ்லானா தொடர்ந்து கூறுகையில், “போலீசாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் சுல்தான்பூரிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்து வழக்கறிஞர்களால் அவர்கள்
தாக்கப்பட்டுள்ளனர்.


புல்டோசர் கொண்டு முஸ்லிம்களின் வீடுகளை இடிப்பேன் என்று
ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரே பேசியிருப்பது குறித்து ஒரு போலீஸ் உயர் அதிகாரியிடம்கேட்டபோது அவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 'முதலமைச்சரும் அமைச்சர்களும் புல்டோசர் பற்றி பேசுகிறார்கள். அதனைத் தடுக்க முடியுமா? என கோபத்தைவெளிப்படுத்தியவாறே அலைபேசி தொடர்பை துண்டித்தார்' என்கிறது இந்தியா டுமாரோ இணையதள ஊடகம்.


ஒரு இன்ஸ்பெக்டரின் வகுப்புவாத வெறுப்புப் பேச்சு குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவரோ, “இது அந்த இன்ஸ்பெக்டரின் முட்டாள்தனமாகும். இதுபோன்ற பேச்சுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்” என அவர் தெரிவித்ததாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

திட்டமிடப்படும்  தாக்குதல்கள் :

இந்துத்வாக்கள் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த- அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்க, அவர்களின் பொருளாதாரத்தை நாசப்படுத்த இதுபோன்ற மதஊர்வலங்களை பயன்படுத்தி வருவது என்பது இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாகவே நடந்து வருகிறது. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களின் போது காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு படையில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மத உணர்வுடன்
இருப்பதால்தான் வன்முறை அதிகரிக்கிறது. காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்காதவரை இதுபோன்ற


வன்முறைகள், கலவரங்கள் இந்தியாவில் முடிவுக்கு வராது .
-அபு

Comments