பாப்புலர் பிராண்ட் மீதான நடவடிக்கை ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அடக்குமுறையே!
பாப்புலர் பிராண்ட் மீதான நடவடிக்கை
ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அடக்குமுறையே!
சமீபத்தில், இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின்
அலுவலகங்களில் அமலாக்கத்துறையும், தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் ஆகியோரின் உத்தரவுப்படி அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன.
இந்த ரெய்டுகள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. முஸ்லிம் சமூகம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை அச்சுறுத்தும் ஒன்றிய பாஜக அரசின் செயல் இது என இந்த ரெய்டுகள் குறித்து சமூக செயற்பாட்டாளர்களும் விமர்சித்திருந்தனர்.
என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றின் ரெய்டுகளில் அவை எதிர்பார்த்த எதுவும் சிக்காததால், அரைத்த மாவை அரைப்பது போல, இஸ்லாமிய அரசை நிறுவ சதி செய்ததாக பாப்புலர் பிரண்ட் மீது அவை குற்றம் சுமத்தியுள்ளன. கடந்த செப்டம்பர் 22ம் தேதி, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில், பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகளின் ரிமாண்ட் ரிப்போர்ட்டை சமர்ப்பித்திருந்த என்ஐஏவும், அமலாக்கத்துறையும் பல்வேறுகுற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. அதில் பயங்கரமான மற்றும் முக்கியக் குற்றச்சாட்டுதான் இஸ்லாமிய அரசை நிறுவ முயற்சித்தார்கள் என்பது!
பயங்கரவாத அமைப்புகளுக்கு பாப்புலர் பிரண்ட் நிதி அளித்தது என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 15 மாநிலங்களில் என்.ஐ.ஏவும் அமலாக்கத் துறையும்- மற்றும் மாநில காவல்துறையும் இணைந்து சோதனைகளை நடத்தின. 93 இடங்களில் 300 அதிகாரிகள் ஈடுபட்ட இந்த சோதனையில் பிஎஃப்ஐயின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில்,அமைப்பின் சில உயர்மட்ட தலைமை மற்றும் முக்கிய பிரமுகர்களும் அடக்கம் என மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிமாண்ட் ரிப்போர்ட்டில் , பாப்புலர் பிரண்ட் அமைப்பு பகைமையை உருவாக்க, பொது அமைதியை கெடுக்கும் நோக்கில், நல்லிணக்கத்திற்கு எதிராக மற்றும் இந்தியாவிற்கு எதிரான அதிருப்தியை உருவாக்க பல்வேறு மதத்தினர் மற்றும் குழுக்களுக்கு மத்தியில் பகைமையை உருவாக்குவதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட சதி செய்துள்ளது என தெரிவித்துள்ளது என்.ஐ.ஏ.
மேலும், அந்த ரிமாண் ரிப்போர்ட்டில், “பிஎஃப்ஐ அமைப்பு பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிற வகையில் குற்றவியல் சட்டங்களைநியாயப்படுத்துகிற (இஸ்லாமிய ஷரியத் சட்டம்) மாற்று நீதிவழங்கல் அமைப்பு முறையை பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும், லஷ்கரே தய்யிபா, ஐஎஸ்ஐஎஸ் தேஷ் மற்றும் அல்காயிதாஉள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அதோடு, வன்முறை ஜிஹாத்தின் (?!) ஒரு பகுதியாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ சதித்திட்டம் தீட்டியுள்ளது” என்றும் ரிப்போர்ட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
![]() |
அமித் ஷா |
![]() |
அஜித் தோவல் |
மேலும், இந்த வழக்கில் சமூகத்தின் மிக முக்கியமானவர்களும் சம்மந்தப்பட்டுள்ளனர்.அந்த சமூகம் மற்றும் அதன் வளர்ச்சியை ஒரே அழைப்பில் ஸ்தம்பிக்கச் செய்யும் அளவிற்கு இவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் மற்றும் அவர்களின்தொண்டர்கள் எடுக்கும் நிலைப்பாட்டின் மூலம் சாதாரண மனிதன்அச்சுறுத்தலுக்குள்ளாகிறான். இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் நிச்சயமாக தலைமறைவாகி விடுவார்கள். பின்னர் இந்த விசாரணை மேலும் அதைத் தொடர்ந்தவிசாரணைக்கு அவர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றெல்லாம் எர்ணாகுளத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்த ரிமாண்ட் ரிப்போர்ட்டில் அது தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையின் ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கடந்த பல ஆண்டுகளாக 120 கோடிக்கும் அதிகமான நிதி பி.எஃப்ஐ மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரும் பகுதி ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் 2020 தில்லி வன்முறைக்கும், ஹத்ராஸ் சம்பவத்திற்கான எதிர்ப்பு போராட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, பிரதமரின் ஜூலை 12,2022 பாட்னா விஜயத்தின் போது இடையூறு செய்யும் நோக்கத்துடன் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, அந்த ரிப்போர்ட்டில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன்இணை அமைப்புகளும் பல்வேறு அரபு நாடுகளிலிருந்து கட்டமைக்கப்பட்ட முறையில் நிதி திரட்டி யிருக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ஐஏ இப்படி குற்றம் சாட்டுவது புதிது அல்ல; இதற்கு முன்பும் இதே போன்ற
குற்றச்சாட்டுகளை அது பி.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்புகள் மீது (இதில் நாட்டில் இல்லாதஅமைப்புகளும் அடங்கும்) முன்வைத்துள்ளது. கடந்த 2018 ம் ஆண்டு கேரளா மருத்துவ மாணவி ஆதியா என்கிற அகிலாவின் காதல் விவகாரத் திலும் பயங்கரவாத அமைப்புகளுடன் பிஎஃப்ஐக்கு தொடர்பு உள்ளது. அதன் தொண்டர்கள் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டு, இந்துப் பெண்களை திருமணம் செய்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு அவர்களை அனுப்புகிறார்கள் என்ற பயங்கர குற்றச்சாட்டையும் என்ஐஏ முன் வைத்தது
![]() |
நாடு முழுவதும் ரெய்டு |
இதனை கேரள மாநில முதல்வர் மறுத்திருந்தார். கேரள மாநில டிஜிபியும் கோவாவில் நடந்த காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாதஅமைப்புகளுடன் பி.எஃப்.ஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளுக்கு தொடர்பில்லை என தெரிவித்திருந்தார். அவ்வளவு ஏன் ? அகிலா வழக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் பிஎஃப்ஐக்கு தொடர்பில்லை என உச்சநீதிமன்றத்தில் என்.ஐ.ஏவே ஒப்புக்கொண்டது. இது தவிர, நாட்டில் என்ஐஏ விசாரித்த எந்த வழக்கிலும் அது வெற்றி பெற்றதில்லை; குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தந்த வழக்கும் இல்லை. என்ஐஏ பயங்கரவாத நடவடிக்கையில் குற்றம் சாட்டிய பலர் உச்சநீதிமன்றத்தால், உயர் நீதிமன்றங்களால் போதுமான ஆதாரமில்லை என்றுவிடுவிக்கப்பட்ட வழக்குகள் ஏராளம் உண்டு. இந்த வழக்கும் அதுபோலத் தோல்வியைத்தான் தழுவும்!
அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகின்ற தில்லி 2020 கலவரத்தை ஏற்படுத்தியவர்கள்பிஜேபி தலைவர்கள் தான். பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா, கரவால் நகர் எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட், முஸ்தபாபாத் முன்னாள் எம்எல்ஏ ஜகதீஷ் பிரதான், பாக்பத் எம்பி சத்ய பால் சிங், ஜோஹ்ரிபூர் கவுன்சிலர் கன்ஹையா லால் மற்றும் உதார் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் வன்முறையைத் தூண்டும் வகுப்புவாத பேச்சுக்களை பேசி கலவரத்துக்கு காரணமானவர்கள்.
தொடர்ந்து இந்துத்வா கும்பல் கலவரத்தை ஏற்படுத்தியதில் 53 பேர்
கொல்லப்பட்டதும், கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் முஸ்லிம்கள் என்பதும் அதுவும் இவர்கள் சுடப்பட்டும், பலமுறை வெட்டப்பட்டும், தீயிட்டு கொளுத்தப்பட்டும் பலியானவர்கள் என்பதை நாடே அறியும். தில்லி கலவரம் தொடர்பான செய்திகள் விக்கிபீடியா உட்பட இணையதளங்களில் இன்றும் காணக்கிடைக்கின்றன. தில்லி கலவரம் ஹத்ராஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிஜேபி உள்ளிட்ட இந்துத்வாக்களுக்கு எதிரானவைஎன்பது கவனிக்கத்தக்கது.
அரபு நாடுகளிலிருந்து பி.எஃப்.ஐ நிதி திரட்டியுள்ளது என்று
கூறும் அமலாக்கத்துறை அது சட்ட விரோதமாக திரட்டப்பட்டதா என்ற தகவலை தெரிவிக்கவில்லை. சமூக நலன், பேரிடரின் போது உதவி, அமைப்பின் நிகழ்ச்சிகள்,அறப்போராட்டங்கள் முதலியவற்றிற்காக பயன்படுத்தப்படும் நிதி அது என்கிறதுபி.எஃப்.ஐ.
![]() |
ரெயிடின் போது |
வெளிநாடுகளில் நிதி திரட்டுவது என்ன சட்ட விரோதமா? வெளிநாடு வாழ் இந்தியர்கள்தரும் நிதி சட்டவிரோதம் என்றால் கடந்த இரண்டு மாதங்களாக துர்ஹா வாஹினியின தலைவியும், இந்துத்வாவின் மூத்த தலைவரும், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குகாரணமானவர்களில் முக்கியமான ஒருவருமான சாத்வி ரிதம்பரா அமெரிக்காவில் நிதி திரட்டி வருகிறாரேஇங்கிலாந்திலும் சென்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளாரே அது என்ன? சரி, அந்த நிதி எதற்காக செலவிடப்படுகிறது? இந்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவா? அல்லது கோசாலைகளில் உள்ளபசுக்களை பரமாரிக்கவா? எதற்காக இந்த நிதி திரட்டப்படுகிறது? ஹிந்து ராஷ்டிரத்தைஉருவாக்க, அதற்காக வகுப்பு மோதல் ஏற்படுத்த, பாஜகவை தேர்தலில் வெற்றி பெற வைக்க,அதற்காக, நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளை நடத்த, மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டு பண்ண, ஆர்.எஸ்.எஸ் ஷாக்கர்கள் நடத்த, பாபரி மஸ்ஜித்போன்று வாரணாசி, கியான் வாபி, மதுரா ஷாஹி ஈத்கா மஸ்ஜிதுகளை இடிக்கும்சதித்திட்டம் தீட்ட, அதற்கான பயிற்சி முகலாம்களை நடத்த என்றெல்லாம் நாம் சொன்னால் அது மிகையாகுமா?
30 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகளில் பயணித்த யஸ்வந்த் ஷிண்டே நான்டெட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப்பத்திரம், ரிதம்பரா போன்றவர்கள் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் திரட்டும் நிதி எதற்காக பயன்படுத்தப்போகிறது என்பதை தெளிவாக சொல்லுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். பி.எஃப்.ஐ மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைத்தான் மீண்டும் வைத்திருக் கின்றன பாதுகாப்புஅமைப்புகள். இந்தியாவின் பிரபலமான இஸ்லாமிய அமைப்பான பி.எஃப்.ஐ. இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது. ஒன்றிய அரசின் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகள் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அச்சுறுத்தல் என்கிறது பிஎஃப்ஐ.
இக்கூற்று உண்மைதானே!
-அபு.
Makkal Report Weekly Oct 1-7,2022
Comments
Post a Comment