மதச்சார்பற்ற நாட்டில் இவற்றை அங்கீகரிக்க வேண்டும் !
மதச்சார்பற்ற நாட்டில் இவற்றை அங்கீகரிக்க வேண்டும் !
====================================================
உத்திரப்பிரதேச மாநிலம் அலஹாபாத் மருத்துவமனையில் ஒரு முஸ்லிம் பெண்மணிதொழுகை விரிப்புடன் தனியாக தொழுகையில் ஈடுபட்டதை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.விசாரணை
செய்த போலீஸ், இதனைக் குற்றமாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அலஹாபாத் போலீஸ் , விசாரணை துவங்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வீடியோ கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மீடியாக்களிடம் தெரிவித்திருந்தது.
![]() |
| தொழுகையில் முஸ்லீம் பெண் |
உத்திரப்பிரதேசப் போலீசாரின் இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானபிரச்சாரம் சமூக வலைதளங்களில் தொடங்கியதைத் தொடர்ந்து, “வீடியோ பதிவில் தொழுகையில் ஈடுபடும் பெண் எவ்வித தவறான நோக்கமும் இல்லாமல் தொழுகையில் ஈடுபட்டுள்ளார். யாருக்கும், எந்த வேலைக்கும் இடையூறு இல்லாமல் நோயாளி குணமடைய வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார். இது எந்த வகை குற்றத்தையும் சாராது என விசாரணையில் தெரியவந்திருக்கிறது என உ.பி. போலீஸ்டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறது. இருப்பினும், இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அந்த முஸ்லிம் பெண்ணை எச்சரித்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.
சம்பவம் நடந்த அலஹாபாத் தேஜ்பஹதூர் சப்ரு மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளரான டாக்டர் எம்.கே.அகவ்ரி, “இது பொது இடம் என்பதால் நோயாளிகள் தங்கியுள்ள வார்டுகளில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளோம்” என்கிறார். மருத்துவமனையிலுள்ள டெங்கு (காய்ச்சல்) வார்டில் நோயாளியை கவனித்துக் கொண்டிருந்த அந்த முஸ்லிம் பெண் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு தெரியாமல் யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து டிவிட்டர் பதிவில், “மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டால், அவர்களுடைய உறவினர் கவனித்துக் கொள்வது, பிறரை காயப்படுத்தாமல் தங்களது மதத்தின்படி பிரார்த்தனை செய்வதில் என்ன குற்றம் இருந்து விட முடியும்? எங்கு தொழுகை நடத்தினாலும் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது. உ.பி. போலீசாருக்கு வேறு வேலை எதுவும் இல்லையா?” என தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் ஹைதராபாத் எம்.பி. அஸத்துத்தீன் உவைசி.
மேற்கண்ட சம்பவத்திற்கு மூன்று வார காலத்திற்கு முன் உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் தொழுகையில் ஈடுபட்ட 25 முஸ்லிம்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தது உத்திரப்பிரதேச போலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையின் கண்காணிப்பாளர், இது பொது இடம்; இங்கு தொழுகை
நடத்தக்கூடாது என்று சொல்வது- எவருக்கும் இடையூறு இல்லாமல் எங்கு
வேண்டுமானாலும் ஒரு இந்தியக் குடிமகன் வழிபாடு செய்ய உரிமையிருக்கிறது என்பதையும் தாண்டி ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் எல்லா சமூக மக்களுக்கும் இதே கட்டுப்பாடுகளை அந்த மருத்துவமனை கடைபிடிக்குமா என்பதுதான் கேள்வி!
மருத்துவமனை வளாகங்களில் பல இடங்களில் கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.அங்கெல்லாம் வழிபாடு நடக்கிறதே இதுவும் பொதுவெளிதான் என மருத்துவமனைகள் கட்டுப்பாடுகளை விதித்தால் அது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதாகவே அமையும். மதச்சார்பின்மை கொண்ட நாடுதான் என்றாலும் மக்களின் மத உணர்வுகளில் அரசு
தலையிடக்கூடாது. பன்முக கலாச்சாரம் கொண்ட நாட்டில் இதுபோன்ற
நடவடிக்கைகளை அமைதியாக அங்கீகரித்து கடந்து போக வேண்டும். சர்ச்சையாக்க கூடாது!
- அபு.

Comments
Post a Comment