தில்லி வன்முறை முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று -குடிமக்களின் குழு அறிக்கை!

தில்லி வன்முறை முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று
-குடிமக்களின் குழு அறிக்கை!


ஓய்வு பெற்ற புகழ்பெற்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட இந்தியாவின் குடிமக்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறுப்புணர்வு கொண்ட அறிக்கைகள், பொதுத் தளங்களில் வெறுப்புப் பேச்சு முதலானவற்றுக்கு எதிராக அரசின் நடவடிக்கையின்மை ஆகியவை  நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன எனக்  கூறி அவர்கள் ஆழமான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

நிச்சயமற்ற நீதி (Uncertain Justice ) என்கிற தலைப்பில், 2020ல் வடக்கு தில்லியில் நடந்த முஸ்லிம்களுக்குஎதிரான கலவரம் பற்றிய குடிமக்கள் குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோகுர் தலைமையில், நீதிபதி ஏ.பி.ஷா (மதராஸ் மற்றும் தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் சட்டக் கமிஷனின் முன்னாள் தலைவர்) நீதிபதி ஆர்.எஸ்.சோதி (தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி), நீதிபதி அஞ்சனா பிரகாஷ் (பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி), ஜி.கே. பிள்ளை ஐஏஎஸ் (முன்னாள் உள்துறை
செயலாளர்) ஆகியோர்களைக் கொண்ட இந்தக் குடிமக்கள் குழு, பல்வேறு முன்னாள் சிவில் அதிகாரிகளைக் கொண்ட அரசியல் அமைப்பு நடத்தை குழுவினால்,(Constitutional Conduct Group)வடக்கு தில்லி கலவரத்திற்கு பின் அமைக்கப்பட்டது.

Anti-riot force

குடிமக்கள் திருத்தச் சட்ட (சி.ஏ.ஏ) போராட்டம் நாடு முழுவதும் உச்சக்கட்டத்தில் நடந்துக் கொண்டிருந்த போது வடக்கு தில்லியில் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது தலைநகர் தில்லிக்கான சட்டமன்றத் தேர்தலும் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது நடந்த இந்த கலவரத்தில் 53 பேர் பலியாயினர். கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்  ஆவர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட குடிமக்கள் குழுவின் அறிக்கை மூன்று பாகங்களைக் கொண்டது. வன்முறையின் தோற்றம், தன்மை மற்றும் வன்முறைக்குப் பிந்தைய விளைவு என வன்முறையின் பன்முகத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தியுள்ள இந்தக்குழுவின் அறிக்கை, பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த வன்முறையில் இந்து- முஸ்லிம் சமூகத்திற்கிடையிலான துருவமுனைப்படுத்தல்,குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு வன்முறைக்கு காரணமாகியுள்ளது என சுட்டிக் காட்டுகிறது.

‘2019ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பான நடைமுறையால் அதிலிருந்து வெளியேற்றப்படுவோம் என்று முஸ்லிம் சமூகத்தை ஆட்கொண்ட கவலை அவர்களை போராட்டக் களத்தை நோக்கித் தள்ளியது. 

Citizens Committee Report

2019ன் மத்தியில், இந்த சட்டத்திற்கு எதிராக நாடுதழுவிய பாராட்டம் வெடித்தது.வடக்கு தில்லியில் பல்வேறு போராட்ட அமர்வுகளுடன் தலைநகர் தில்லி இந்த போராட்டத்திற்கான மையக்களமானது. இந்த சூழ்நிலையில், தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை வேகமமெடுத்தது என்று சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, ‘பாரதிய ஜனதா கட்சி அதன் சிஏஏ சட்ட மசோதாவை தேர்தல் பிரச்சாரக் களத்தில் முன்னிறுத்தியது. பிஜேபி அதன் தேர்தல் பரப்புரையை, அதன் தலைவர்களான அனுராக் தாகூர் (இப்போது மத்திய மந்திரி), கபில் மிஷ்ரா முதலானோர் மூலம் சிஏஏவிற்கு எதிராக போராடுபவர்கள் தேசவிரோதிகள், வன்முறையாளர்கள், போராட்டக்காரர்கள் தேசதுரோகிகள் என முத்திரை குத்தி வகுப்புவாத அடிப்படையில் முன்னெடுத்தது. அதோடு,வெறுப்புணர்வைப் பரப்புவதில் தேசிய ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பங்கு அவை வெளியிட்ட செய்திகளில்  இருந்த போராட்டக்காரர்கள்  குறித்த அவதூறு முஸ்லிம் வெறுப்பு ஆகியவற்றையும் சுட்டிக்காட்டுகிறது.

டிசம்பர் 2019-பிப்ரவரி 2020 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் 6 பெரிய தேசிய செய்தி ஊடகங்களில் பிரைம் நிகழ்ச்சிகளை ஆய்வு செய்துள்ள குடிமக்கள் குழு, வெறுப்புணர்வை பெருகியதில் ரிபப்ளிக், டைம்ஸ் நவ் (ஆங்கிலம்) ஆஜதக், ஜீநியுஸ், இந்தியா டிவி மற்றும் ரிபப்ளிக்பாரத் ஆகியவற்றின் போக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வகுப்புவாத உணர்வுகள் பரப்பப்படுவதை தடுப்பதில் அலட்சியமாக அதிகாரிகள் இருந்ததைக் குறிப்பிடும் இந்த அறிக்கை, பிப்ரவரி 2020 வன்முறையின் அனைத்து நிலைகளும் அதாவது- வன்முறையின் துவக்கம், இயல்பு மற்றும் பின்விளைவுகள் ஜனநாயக மாண்புகளை கேள்விக்குறியாக்கின. வன்முறைக்கான அரசின் எதிர்வினைகளால் வகுப்புவாத துருவமுனைப்பு இன்னும் கடினமானது என்று கூறும்
அறிக்கை, சட்டம் ஒழுங்கு அதிகாரிகளையும்  கண்டித்திருக்கிறது.

பிப்ரவரி 25 அன்று அரசியல் தலைவர்களால் நிகழ்த்தப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில் தோல்வியடைந்த தில்லி போலீசின் பங்கு பற்றியும் இந்த அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது. முஸ்லிம்கள், சிஏஏ எதிர்ப்பு போராட்டக் களங்கள், மஸ்ஜிதுகளில் நடந்த கும்பல் தாக்குதலுக்கு தில்லி போலீஸ் உதவியதான குற்றச்சாட்டுகள் நேரடி சாட்சிகள், மீடியா மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சமூக வலைதள கணக்குகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன  என்கிறது அறிக்கை.

2020 East Delhi  Riots



பிப்ரவரி 23 அன்று வடக்கு தில்லியில் பாதுகாப்பை அதிகரிக்கச் சொல்லி தில்லி உளவு அமைப்புகள் எச்சரித்த போதும், அதிகாரப்பூர்வ தகவல்கள், பிப்ரவரி 26ம் தேதிதான் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. ஆக, கலவரம் நிகழ்ந்த பிப்ரவரி 24- 25 ஆகிய தேதிகளில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அப்பகுதியில் அதிகரிக்கப் படவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் சொல்லப்போனால் வடகிழக்கு தில்லி பகுதியிலிருந்து 24- 25 தேதிகளில் உதவி கேட்டு
அல்லது அபயம் கேட்டு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் தில்லி போலீசுக்கு வந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.

தில்லியின் ஆம் ஆத்மி அரசு ஒட்டுமொத்தமாக இந்த கலவர சம்பவங்களில் இருசமூகங்களுக்கு மத்தியில் மத்தியஸ்தம் செய்யவும் சிறிய முயற்சியை எடுத்திருக்கிறது.பிப்ரவரி 25 வரை கடுமையான எச்சரிக்கையும் விடுத்திருந்தது. என்றாலும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் போதுமான நிவாரணம் மற்றும் இழப்பீட்டை வழங்குவதில் தில்லி அரசு தோல்வியடைந்திருக்கிறது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், தில்லி போலீசின் குற்றப்பத்திரிகைகளில் பல முரண்பாடுகள் உள்ளதாகக் கூறும் அறிக்கை, வன்முறைக் கும்பலை அணி திரட்டிய, வன்முறையை தூண்டிவிடும் வெறுப்புப் பேச்சை பேசியவர்களை தில்லி போலீஸ் விசாரிக்கவில்லை என்றும் கூறுகிறது.

வடக்கு தில்லி கலவரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள
சுயாதீனமான ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள குடிமக்கள் குழு, “வகுப்புவாதம் பல சமூகம் இணக்கமாகவும் அமைதியாகவும் இருக்கும் சூழலைக் கெடுக்கிறது. நீதி என்பது சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்முறையில் உள்ளது. அதை நோக்கி அரசு நகர வேண்டும்” என்கிறது.
-அபு

Comments