மஸ்ஜித்தில் நுழைந்த இந்துத்வா கும்பல்! ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு இந்து மத சடங்கு நிறைவேற்றம்!!

கர்நாடகா:
 மஸ்ஜித்தில் நுழைந்த இந்துத்வா கும்பல்!
ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு இந்து மத சடங்கு நிறைவேற்றம்!!


கர்நாடகாவின் பிதாரில் அமைந்துள்ள 15ம் நூற்றாண்டின் முஹம்மது கவான் மஸ்ஜித் மதரஸாவிற்குள் வன்முறையாக புகுந்த இந்துத்வா கும்பல், "ஜெய் ஸ்ரீராம்";  'இந்து தர்மா ஜெய்' முதலான முழக்கங்களுடன் இந்துமத சடங்குகளை நிறைவேற்றியுள்ளது.

மதரஸாவை சேதப்படுத்தி விட்டனர் என முஸ்லிம் தரப்பினர் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கடந்த அக்.5ம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அக்டோபர் 6ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ  பதிவுகள் சமூக வலைதளங்களில் நூற்றுக்கணக்கில் பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டுள்ளது.

வீடியோ பதிவில், இந்துத்வா கும்பல் மதரஸாவின் படிக்கட்டுகளில் பெரும் கூட்டமாக நின்று கொண்டு, டிரம்ஸ் அடித்து  பாடல்களை  உரத்து ஒலிக்கவிட்டு  அதனூடே அவர்கள் முழக்கங்களை எழுப்புகின்றனர். மதரஸாவின் ஒரு மூலையில் இறுதி சடங்குகளை நிறைவேற்றுகின்றனர். 


Mohamed Kawan Moque & Madarasa

 இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹைதராபாத் எம்.பி. அசத்துத்தீன் உவைசி, “கர்நாடக மாநிலம் பிதாரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க முஹம்மது கவான் மஸ்ஜித் மற்றும் மதரஸாவின் வாயிலை உடைக்கும் கடும் போக்குவாதிகள் வழிபாட்டுத் தலத்தின் புனிதத்தை கெடுக்க முயற்சித் திருக்கிறார்கள் என்பது வீடியோ பதிவுகளால் உணர முடிகிறது. பிதார் போலீஸ் மற்றும் முதல்வர் பி.எஸ்.பொம்மை இத்தகைய சம்பவம் நடைபெற எப்படி அனுமதிதார்கள்? முஸ்லிம்களை இழிவு படுத்துவதற்காகவே இதுபோன்ற செயல்களை பிஜேபி ஊக்கப்படுத்தி வருகிறது” எனக் குறிப்பிட்டு பிதார் போலீஸ் மற்றும் முதல்வர் பொம்மைக்கு ஹேஷ் டேக் செய்திருக்கிறார்.

இந்திய தொல்லியல் துறையால் முஹம்மது கவான் மஸ்ஜித் மற்றும் மதரஸா பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தேசிய முக்கியத்துவம் பெற்ற வரலாற்று நினைவுச் சின்னங்கள் பட்டியலிலும் இதனைச் சேர்த்துள்ளது, தொல்லியல் துறை. இந்த மஸ்ஜித் மற்றும் மதரஸா 1460ல் துவங்கப்பட்டது. பின்னர் தக்காணத்தை ஆண்ட பாமிணி சுல்தானான பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த - இந்த மஸ்ஜிதை நிறுவிய முஹம்மது கவானின் பெயரே இதற்கு  வைக்கப்பட்டுள்ளது. 

தசரா கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்துத்வாவினர் மஸ்ஜிதில் புகுந்து அராஜகத்தில் இறங்கியுள்ளனர். பிதார் பகுதியின் முஸ்லிம்கள், மஸ்ஜிதிற்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்யத் தவறினால் அக்டோபர் 7ம் தேதி பெரும் மக்கள் திரள் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரித் திருந்தனர்.

Hindutva
Performing pooja inside the madarasa


இதனையடுத்து 9 பேர் மீது வழக்கு பதிந்த பிதார் போலீஸ் உடனடியாக 4 பேரை கைது செய்திருக்கிறது. “பாரம்பரிய- பாதுகாக்கப்பட்ட கட்டிடத்திற்குள் சட்ட விரோதமாக அத்துமீறி உள்ளே நுழைந்தது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிடம் தெரிவித் திருக்கிறார் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளரான மகேஷ் மெகான்னவா. இது, குற்றவாளிகளுக்கு எதிராக வகுப்புப் பதட்டத்தை அல்லது காந்தளிப்பை உருவாக்கியது தொடர்பான வழக்குகள் அவர்கள் மீது பதியப்படவில்லை என்பதை வெளிப்படுத்துவதாய் உள்ளது. வெறும் அத்து மீறி நுழைந்ததாகவே வழக்கு போட்டிருக்கிறது போலீஸ்! 

பிதார் மார்க்கெட் காவல் நிலையத்தில், சையது முதாகிர் என்பவர் புகார்
கொடுத்த பின்னர் தான் போலீஸ் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மதரஸா உள்ளே புகுந்து தேங்காய்களை உடைத்து இந்துத்வா கும்பல் பூஜை, சடக்குகளை செய்ததன் மூலம் மதரஸா சேதமடைந்ததாக முஸ்லிம் தரப்பினர் சொல்வதை மறுக்கும் போலீஸ் ' மஸ்ஜித் சேதமடையவில்லை ' என்று தெரிவித்துள்ளது (உள்ளே புகுந்த கும்பல் அங்கு தேங்காய்களை உடைத்ததை இதன்மூலம் போலீஸ் ஏற்றுக் கொள்கிறது. ஆனாலும் மத கோணத்தில் வழக்குகளை அது பதிவு செய்யவில்லை)

Hindutva Group Entering inside the Madrasa

இந்திய தொல்லியல்துறையின் அதிகாரியான அனிருத்தா தேசாய் “பவானி கோவிலின் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் கவான் மதரஸா அருகில் உள்ள நடைபாதையில் அடையாள பூஜை செய்வார்கள். அங்கு ஒரு காலத்தில் அரச மரம் இருந்தது. தேங்காய் உடைப்பது என்பது ஒரு ஐதீகம்” என தெரிவித்தார் என்கிறது டெக்கான் ஹெரால்டு ஏடு!  

ஏனைய துறைகளைப் போலவே தொல்லியல் துறையும் காவி வண்ணத்தைப் பூசிக் கொண்டுள்ளது. அதனால்தான் தொல்லியல் அதிகாரியின் பார்வைக்கு, அத்துமீறி இன்னொரு வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்து அதுவும்-பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுச் தளத்திற்குள்  நுழைந்து பூஜை செய்தது தவறாகப் படவில்லை. ஏதோ, சாலையில் தேங்காய் உடைத்து ஐதீகத்தை நிறைவேற்றியதாக அலட்சியமாக சொல்கிறார். இதுவே, கோவிலுக்குள் நுழைந்து ஒரு முஸ்லிம் கும்பல் வழிபாடு நடத்தியிருந்தால் அரசின் அத்தனை இயந்திரங்களும் அலர்ட் ஆகியிருக்கும். அரசு மருத்துவமனையில் வழிபாடு நடத்தியதற்கே வழக்குப் போட்டவர்கள் தானே இவர்கள்!

-அபு

Comments