தமிழை புறக்கணிக்கும் வித்யாலயா பள்ளிகள்!

தமிழை புறக்கணிக்கும் வித்யாலயா பள்ளிகள்!
 
ஒன்றிய அரசின் கல்வித்துறையால் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரேயொரு தமிழாசிரியர் கூட இல்லை என்றும், சமஸ்கிருதத்தை கற்பிக்க 53 ஆசிரியர்கள் இருப்பது தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தால் நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா என்ற பெயரில் தேசிய பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 இந்தியா முழுவதும் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாட்டில் 3 பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு மாவடங்களில் மொத்தம் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. ஒட்டு மொத்தமாக நாடு முழுவதிலும் உள்ள  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டும் 14.35 லட்சம் மாணவ மாணவிகள் கல்வி  பயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளிகளில் பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு பணியில் இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகளும் பயின்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய பாடத்திட்டத்துடன் கல்வித்தரமும் குறைவான கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவதால் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்

 ஒவ்வொரு ஆண்டும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க போட்டி நிலவி வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் இயங்கி வரும் இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை பயிற்று மொழியாக உள்ளன என்பது கவனத்திற்குரியது. மத்திய அரசுப்பணிகளில் இருக்கும் பிராந்திய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஹிந்தி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக தங்கள் பிள்ளளைகளை இது போன்ற கல்வி நிலையங்களில் சேர்க்கவேண்டிய சூழலும் ஏற்படுகிறது . பிராந்திய மொழிகளும் கூட அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.கேந்திர வித்யாலயா பள்ளிகளின் தலைவராக அந்த, அந்த மாவட்ட ஆட்சியரே உள்ளனர். இதன்படி யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதையும் ஆட்சியரே முடிவுசெய்வார்.

 ஆனால், தமிழ்நாட்டில்  உள்ள கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பயிற்றுவிக்கப்படுவது இல்லை என்றும், இந்தி, சமஸ்கிருதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு  பள்ளி நிர்வாகம் அளித்த பதில்கள் மேற்கண்ட  இந்த குற்றச்சாட்டுக்களை மெய்பிப்பதாகவே  உள்ளது.

தகிமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்களில் தமிழ், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை பயிற்றுவிக்க எத்தனை ஆசிரியர்கள் உள்ளார்கள்? தமிழ், இந்தி, சமஸ்கிருத மொழிகள் பள்ளியில் கட்டாயப்பாடமா ? என்பன உள்ளிட்ட 15 கேள்விகள் அதில் எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம் இந்தி ஆசிரியர்கள் 109 பேரும், சமஸ்கிருத ஆசிரியர்கள் 53 பேரும் இருப்பதாகவும் தமிழாசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளது.


அதேபோல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் கேந்திரிய வித்யாலயாவில் கட்டாயமாக படிக்க வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பு முதல் விருப்ப பாடமாக சமஸ்கிருதம், இந்தியை தேர்வு செய்துகொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ் மொழி பாடம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மத்திய அரசு பணியில் இருப்பவர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு பணியிட மாறுதல் பெற்று செல்லும்போது அவர்களின் பிள்ளைகள் வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்து குழம்பிவிடக் கூடாது என்பதற்காகவும் இந்திய இராணுவத்தின் அதிகாரி பணியாளர்களிடையே பிராந்திய மற்றும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதற்கும், தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்.டி.ஏ) நுழைவதற்கு மாணவர்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்துவதற்கான நோக்கத்துடன் தான்   இந்த பள்ளிகள் ஒன்றிய அரசால் துவக்கப்பட்டன.

ஆனால் இந்த பள்ளிகள் கொண்டுவரப்பட்ட  நோக்கம் சிதைக்கப்படுகிறது. கல்வித்துறை காவிமயமானதிலிருந்து அல்லது பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் பிராந்திய மொழி    பேசும் மாநில மக்கள் மீது வலிந்து திணிக்கும் முயற்சிகள் பல்வேறு வடிவத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.தென்னிந்தியா மாநிலங்கள் மீது இந்த முயற்சிகள் வேகப்படுத்தப்படுகின்றன. ஒரேய நாடு ஒரேய மொழி என்ற ஆர் எஸ் எஸ் கருத்தியலுக்கு வலு சேர்க்கும் வகையில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் விளைவுகளில் ஒரு பகுதிதான் தமிழகத்தில் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் வழக்கில் இல்லாத-மக்கள் மத்தியில் பேசப்படாத செத்துப்போன மொழியாக கருதப்படும் சமஸ்கிருதத்தை போதிக்க 53 ஆசிரியர்கள் இருக்க தமிழ் மொழியை போதிக்க ஒரு ஆசிரியர் கூட இல்லை என்ற நிலை இருப்பது!

அதேபோல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் கட்டாய பாடமாக பாடம் என்பதும்   ஒன்பதாம் வகுப்பு முதல் விருப்ப பாடமாக சமஸ்கிருதம், இந்தியை தேர்வு செய்யலாம் என்றும் இதில், தமிழ் காட்டாயப்பாடமாகவோ விருப்பப் பாடமாகவோ கூட இல்லை என்பது  தமிழுக்கு ஏற்பட்ட பரிதாப நிலையல்லவா? இது தமிழர்களை அவமதிக்கும் செயலில்லையா? தமிழகத்தில் இயங்கிக்கொண்டே கேந்திர வித்யாலயா பள்ளிகள் தமிழை புறக்கணிப்பதை ஏற்கவோ அனுமதிக்கவோ முடியாது. கேந்திர வித்யாலயா தமிழ் கட்டாய பாடமாகவோ மற்றும் விருப்பப்பாடமாகவோ இல்லாததால் தமிழ்  அங்கு ஒரு தமிழ் ஆசிரியர் கூட பணியில்இல்லாத நிலை இருக்கிறது.

தமிழக அரசு இது தொடர்பாக கவனம் செலுத்தி, தமிழகத்தில் இயங்கும் கேந்திர வித்யாலயா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சைனிக் பள்ளிகள் சங்கத்தால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்ற சைனிக் பள்ளிகளில் தமிழை கட்டாயப்பாடமாகவோ அல்லது குறைந்த பட்சம் விருப்பப்பாடமாகவோ பயிற்றுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்.



 

Comments