இன்னொரு மொழிப்போரை நோக்கித் தள்ளும் ஒன்றிய அரசு !
இன்னொரு மொழிப்போரை நோக்கித் தள்ளும் ஒன்றிய அரசு !
" உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழருக்கே ஏன்டா வாசகத்தை எழுதி பதியுங்கள். நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்துகொண்டான் என்பதோடல்லாமல் அவன் நம் எஜமானன் என்றால் இதைவிட நமக்கு மானமற்ற தன்மை - இழிதன்மை வேறு என்ன என சிந்தியுங்கள் "
-ஹிந்தியை வலுக்கட்டாயமாக தமிழ் சமுதாயத்தின் மீது திணிக்கப் பட்டபோது மேற்கண்ட வேண்டுகோளை தமிழ் சமூகத்துக்கு விடுத்து 1938ல் குடியரசு இதழில் தலையங்கம் எழுதினர் தந்தைப் பெரியார். "நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்துகொண்டான் என்பதோடல்லாமல் அவன் நம் எஜமானன் என்றால் ..." என்ற பெரியாரின் வார்த்தைகள் இன்று உண்மைபபடுத்தப் படுத்துவதை பார்க்க முடிகிறது. நம் வீட்டு எஜமானர்களாகப் பார்க்கிறார்கள் மோடியும் அமித்ஷாவும். நாம் என்ன செய்ய வேண்டும் ; எதை உண்ண வேண்டும் எதை உடுத்த வேண்டும் என்று தீர்மானிக்க முயற்சித்தவர்கள் இன்று நாம் எதை பேச வேண்டும்; எதை எழுத வேண்டும்; எதை படிக்க வேண்டும் என்பதையும் என நம் மீது அதிகாரம் செலுத்தப் பார்க்கிறார்கள்.
![]() |
தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு |
அண்மையில் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவானது இந்தியை திணிக்கும் வகையிலான பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இது கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.
அமித்ஷா குழுவின் பரிந்துரையை கடுமையாக எதிர்த்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும் என கூறியிருந்தார்.
மேலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்டஇந்த தேசத்தில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
முதல்வரின் கூற்று முற்றிலும் உண்மை. உலக அரங்கில் இந்தியாவின் பெருமை இந்திய ஆட்சியாளர்களை வைத்து இல்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, ஆயிரக்கணக்கான இனங்கள் , மொழிகள் ,கலாச்சார பண்பாடுகள் இவ்வளவும் இருந்து சிதறுண்டு போகாமல் ஒரே நாடாக தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்தியாவின் இந்த அழகிய குணம் தான் அதனை உலகம் ஆச்சரியத்தோடு பார்க்க வைக்கிறது.
ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்பு வேலைகளால் இந்தியாவின் கட்டமைப்பு சிதறிவிடும் அபாயம் இருப்பதை நாம் புரிந்து கொண்டு இப்போதே விழித்துக் கொள்ளவேண்டும். ஒரே நாடு ஒரே மொழி என்பது பாசிசக் கொள்கையின் வடிவம். பல மொழிகளின் சங்கமமே இந்திய தேசம் என்பதில் தான் பரவசம்.
எந்த மொழியையும் வெறுப்பது தமிழர்களின் குணம் அல்ல. தமிழர்கள் எந்த மொழிக்கும் எதிரிகளும் அல்ல. பல வெளிநாட்டு மொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயக்கப்பட்டிருக்கின்றன
![]() |
பெரியார் |
ஒவ்வருவரும் பேசும் மொழி அவர்களின் தாய் மொழியாகும். தமிழ் தமிழர்களின் தாய் என்றால் பிற மொழிக்காரர்களின் தாயையும் மதிக்கும் மனம் கொண்டவர்கள் தான் தமிழர்கள். பிற மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அறிவு சார்ந்த விஷயம்தான். ஆனால் அது தமது சுய விருப்பத்தின் பேரில் இருக்கவேண்டுமே தவிர இன்னொரு மொழிக்காரன் , 'என் மொழியை நீ கற்றுத்தான் ஆக வேண்டும்; இதுதான் இந்த நாட்டின் அதிகாரப் பூர்வ மொழியாக இருக்கும் என்று சொன்னால் அதனை எதிர்த்திட தமிழர்கள் களம் அமைப்பார்கள். 'தமிழர் என்றொரு இனம் உண்டு தனியே அவர்கொரு குணமுண்டு' என்ற தமிழனின் குணாதிசயத்தில் இந்த போராட்ட உணர்வும் அடங்கும். இதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ளவேண்டும்!
90 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதே தமிழர்கள் பெருங்கோபம் கொண்டு இந்தி திணிப்பு நடவடிக்கையை தடுத்தனர்.தாய்மொழி பாதுகாப்புக்காக தமிழர்கள் நடத்திய யுத்தத்தின் வரலாறு இது: 1930களின் தொடக்கத்தில் இருந்தே இந்தி திணிப்பு முயற்சிகள் அன்றைய சென்னை மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தந்தை பெரியாரின் தலைமையில் பெரும் போராட்டம் வெடித்தது.
இன்று தமிழகத்தில் தந்தை பெரியார் வழி அரசுதான் நடக்கிறது. ஒன்றிய அரசின் மொழி ஆதிக்க வெறி தமிழ்மண்ணில் தொடர்ந்தால் இந்த நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கும் என்பதை ஒன்றிய அரசுக்கு சொல்லவேண்டிய தருணம் இது. ஒன்றிய அரசு ஹிந்தி திணிப்பு முயற்சியைக் கைவிடுவது நாட்டிற்கு நல்லது.
உலகின் முதல் மொழியும் ஆதி மனிதன் பேசிய மொழியும் தமிழ் தான் என ஆய்வுகள் சொல்லுகின்றன. அதனால் இதன் படி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் தமிழ் தான் அதிகாரப்பூர்வ மொழி என ஒன்றிய அரசு சொல்ல முன்வந்தால் அதை ஏற்க தமிழர்களுக்கு ஆட்சேபனை இல்லை!
மக்கள் ரிப்போர்ட் வார இதழ் தலையங்கம் 15-21,2022
.
Comments
Post a Comment