முற்றாக ஒழிக்கப்படவேண்டும் !

 முற்றாக ஒழிக்கப்படவேண்டும் !

.புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது  இறையுரு கிராமம். இதற்கு அருகாமையில் இருக்கிறது வேங்கைவயல் கிராமம் . இக்கிராமம் கடந்த வாரம் தமிழகத்தின் அனைத்து மீடியாக்களிலும்  முக்கிய இடத்தைப் பிடித்தது .இந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலருக்கு அடுத்தடுத்து திடீர் உடல்நலக்குறைவும், ஒவ்வாமையும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சிறுவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், `சிறுவர்கள் குடித்த குடிநீரில்தான் பிரச்னை இருந்திருக்கிறது. இதனால்தான், சிறுவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது' எனக் கூறியிருக்கின்றனர். 


அருந்ததியர் மக்கள்  வசித்து வரும் இக்கிராமத்தைச் சேர்ந்த சிலர், அவர்கள் பயன்படுத்திவந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்தபோது . குடிநீரின் மேற்பகுதியில் மலம் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த செய்தி பரவத்தொடங்கியதும் .போலீசாரும் அதிகாரிகளும் ஸ்பாட்டிற்கு வந்து விசாரணையைத் தொடஙகியதில்  குடிநீரில் திட்டமிட்டே சிலர் மலத்தை கொட்டியிருப்பது தெரியவந்தது.அந்த கிராமத்தில் இரண்டு தண்ணீர் டேங்க் உள்ளது. ஒன்று தலித் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் டேங்க். இன்னொன்று மற்ற ஜாதியினருக்கு தண்ணீர் வழங்கும் டேங்க். இதில் தலித் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் டேங்க் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது ஆகும் இதில் தான் மலம் கலக்கப்பட்டிருந்தது .

இதையடுத்து, சுமார் 50,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட=மலம் கலக்கப்பட்டிருந்த  மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்த தண்ணீர் முழுவதுவமாக அகற்றப்பட்டு, தொட்டியை  சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்த சம்பவம் குறித்து  கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து நடவடிக்கைக்கு வலியுறுத்தியுள்ளார். குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள்மீது  எடுத்த நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அப்பகுதியில் ஆய்வு செய்தபோது அங்கு தீண்டாமை நிலவுவதையும்  இரட்டை குவளை முறை வழக்கத்தில் இருப்பதையும் கண்டறிந்து  “சாதிய தீண்டாமை கடைபிடிப்பவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும்"  என எச்சரித்துள்ளார்
  புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்களிலும் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகள் நடந்து வருகின்றன. குடிநீரில் இம்மாபாதக செயலைச் செய்தவர்கள் மனிதவடிவிலான மிருகங்களாகத்தான் பார்க்க முடிகிறது.சாதிய வெறியின் வன்மம் அவர்களை இந்த கேவலமான மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட கீழ்த்தரமான செயலைச் செய்ய வைத்துள்ளது.
இறையுர் கிராமத்தில் , இரட்டை குவளை முறை மட்டுமல்ல ;  தலித்துகளை தொட்டால் தீட்டு, தலித் இருக்கும் தெருவுக்குள் மற்ற ஜாதியினர் செல்ல கூடாது, தலித் தெருவுக்குள் சாமி ஊர்வலம் நடத்த கூடாது, கோவில்களுக்குள் தலித்கள் வரக்கூடாது  போன்ற கட்டுப்பாடுகள் பரவலாக நிலவி வருவதும்  இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2022  மே மாதம் தகவல் அறியும் உரிமை  சட்டப்படி கேட்கப் பட்ட  ஒரு கேள்விக்கு,
தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக பொது தகவல் அதிகாரி மற்றும் காவல்துறை உதவி தலைவர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பதிலளித்திருந்தது. தீண்டாமைக்கு கொடுமைகள் ஒழிக்க இயக்கங்கள் தொடங்கப்பட்ட தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் அதிகரித்தே வந்துள்ளன.தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் படி 2009-ம் ஆண்டிலிருந்து 2018 வரையிலான பத்து ஆண்டுகளில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் 27.3% அதிகரித்துள்ளன என்ற புள்ளி விவரங்களை தந்துள்ளது.

தமிழ் நாடு காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தீண்டாமை கிராமங்களை அடையாளம் கண்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த துறை இயங்கிவருகிறது. ஆனால் இந்த துறைக்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என அந்த துறையே கூறுகிறது .
மேலும் கடந்த 2015 - 16 ஆண்டு முதல் 2021 - 22 வரை தமிழ்நாடு அரசால் தீண்டாமை பாகுபாடு ஒழிப்பதற்காக தனியாக எந்த நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் காவல்துறை பதிலளித்துள்ளது. வேங்கைவயலில் நடந்துள்ள சம்பவம் மனித சமூகத்தை வெட்கித்த தலைகுனியவைக்கும் நிகழ்வாகும்.


வேங்கைவயல்  விவகாரத்தில், “சாதியின் பெயரால் தொடக் கூடாது, கோயிலில் நுழையக் கூடாது என்பதெல்லாம் நொறுக்கப்பட்டுவிட்டது” தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள முதல்வர் தமிழகத்தில் தீண்டாமையின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு, தீண்டாமைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்காக காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடுகளை செய்யவேண்டும்.தீண்டாமை என்ற அரக்கன்  தமிழகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்படவேண்டும் !

Comments