அரசியல் ஆதாயம் பெற கொலை செய்யப்பட்ட முஸ்லிம் வாலிபர்!

-

கர்நாடகாவில் முஸ்லீம் நபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார் “அரசியல் ஆதாயத்திற்காக இந்த கொலை நடந்துள்ளது” என்று கர்நாடக முஸ்லிம் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கர்நாடக மாநிலம் சூரத்கல் அருகே கடிபல்லா என்ற இடத்தில் ஃபேன்சி கடை நடத்தி வரும்  அப்துல் ஜலீல் (45) கடந்த டிச 24ம் தேதி சனிக்கிழமை மாலை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜலீல் தனது கடையில் இரவு 8 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.  தாக்குதலிலிருந்து அவர் தப்பி ஓட முயன்ற போதும், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ஜலீல் சூரத்கல் அருகே உள்ள முக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

“முஸ்லிம்களைப் பழிவாங்கத் தூண்டி அரசியல் லாபம் பெறுவதற்காக இந்தக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது.  இந்த சதியில் நாங்கள்   விழுந்து சிக்கலை உருவாக்க மாட்டோம்.  ஆனால் இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான நபர்களை போலீசார் பிடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அதற்கு பின்னாலிருந்து சதி செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.  ஜலீலின் குடும்ப உறுப்பினர்களை முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டும்” என்று தக்ஷின கன்னடா முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் கே. அஷ்ரப் கூறியதாக தி ஹிந்து ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா மற்றும் மங்களூரு போலீஸ் கமிஷனர் என் சஷிகுமார் இருவரும் மங்களூரு மூட்பித்ரியில் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் கலாச்சார நிகழ்சியில் கலந்து கொண்டிருந்தபோது தான் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. அமைச்சர் நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட இடத்திற்கு அருகிலேயே நடந்த இந்த சம்பவம. நடந்துள்ளதால்  உள்துறை அமைச்சர் சம்பவ இடத்தை பார்வையிட்டிருக்க வேண்டும்.  ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை” என்று மங்களூரு நகரம் வடக்கு முன்னாள் எம்எல்ஏ பி.ஏ.மொஹினுதீன் பாவா கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் என். சஷி குமார் டிச 25 ஞாயிற்றுக்கிழமை சூரத்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் Cr.P.C யின் 144 வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகளை பிறப்பித்தார்.  சூரத்கல், பனம்பூர், பாஜ்பே மற்றும் காவூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் டிசம்பர் 27ஆம் தேதி காலை 6 மணி வரை ஐவர் மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் குழுவாக நடமாட தடை விதிக்கப்பட்டது.  கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், மத நிகழ்ச்சிகள் மற்றும் அவசர சேவைகளுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

-அபு  

Comments