கன்னட சாகித்ய பரிஷத்
ஒருவர் கூட முஸ்ஸிம் இல்லை!


கன்னட சாகித்ய பரிஷத் ஏற்பாடு செய்த 86வது அகில பாரத கன்னட சாகித்திய சம்மேளனம் (அகில இந்திய கன்னட இலக்கிய மாநாடு) முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த நகரமான ஹாவேரியில் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாகத் தொடங்கப்பட்டது.
ஆயினும், முஸ்லிம் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளை ஓரங்கட்டுவதாக சமூக ஊடகங்களில் மூன்று நாள் இலக்கிய விழா சர்ச்சையில் சிக்கியுள்ளது.



சமூக ஊடக பயனர்கள் விவாத பேனல்கள், சாதனையாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அமைப்பாளரின் ‘பக்கச் சார்பு அணுகுமுறை இது’ என்று குற்றம் சாட்டியுள்ளனர். 

ஆனால், கன்னட சாகித்ய பரிஷத் எந்த மாற்றமும் செய்யாமல் விழாவை முன்னெடுத்துச் சென்றுள்ளது.

கவிஞர் மாநாட்டிலும், ஒரு முஸ்லிம் எழுத்தாளருக்குக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை, கடலோர கர்நாடக முஸ்லிம்கள் பேசும் பைரி மொழி பரிசீலிக்கப்படவில்லை.  கொங்கனி, சோலிகா, துளு மற்றும் கொடவா போன்ற பிற பேச்சுவழக்குகள் குறித்தும் கூட விவாதம் நடந்தது.

முஸ்லீம் எழுத்தாளர்கள், கன்னட ஆர்வலர்கள் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட இலக்கியவாதிகள்  இந்த 'சார்பு அணுகுமுறையை' எதிர்த்து ஜனவரி 8 ஆம் தேதி பெங்களூரில் ஒரு நாள் இணை இலக்கிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்கை தலைவராக நியமிக்க முடிவு இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தலித் எழுத்தாளரும், ஓய்வு பெற்ற அதிகாரியுமான மூட்னாக்கூடு சின்னசாமி மாநாட்டை துவக்கி வைக்கிறார்.   பெங்களூரு கே.ஆர் சர்கிள் அருகே உள்ள முன்னாள் மாணவர் சங்க வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டுக்கு ‘ஜன சாகித்ய சம்மேளனா’ (மக்கள் இலக்கிய மாநாடு) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் , உணவில் ஆதிக்கமும் அரசியலும்', 'சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்கள்', 'இலக்கிய உலகின் பொறுப்புகள்', 'கன்னட மொழிக்கு கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்களிப்பு' போன்ற பாடங்கள் முன்வைக்கப்படும்.

கன்னட சாகித்ய சம்மேளனா என்பது எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கன்னட அன்பர்களின் முதன்மையான ஒன்றுகூடல் ஆகும்.  இது கன்னட மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் இசை ஆகியவற்றைப் பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.


கன்னட சாகித்ய பரிஷத் என்பது கன்னட மொழி மற்றும் அதன் இலக்கியத்தை மேம்படுத்தும் முதன்மையான நிறுவனமாகும், அதன் தற்போதைய தலைவராக மகேஷ் ஜோஷி உள்ளார்.

-ஹிதாயா

 


Comments