சத்தீஸ்கர் கிறித்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்!


 சத்தீஸ்கர் கிறித்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்!


சத்தீஸ்கரில் உள்ள நாராயண்பூர் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் உள்ள 20 கிராமங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாற மறுத்ததற்காக தீவிர இந்துத்வாவினரால்  இந்த வாரம் தாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 18 அன்று கிறிஸ்தவர்கள் வழிபாட்டிற்காகக் கூடியிருந்த வேளையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  தாக்குதல் நடத்தியவர்கள் பல கிறிஸ்தவர்களின் வீடுகளை சூறையாடி அழித்ததோடு, மூன்று தேவாலயங்களை அசுத்தப் படுத்தியுள்ளனர்.
இந்துத்துவாவினர்,  கிறிஸ்தவர்களைத் தாக்க மூங்கில் தடிகளை பயன்படுத்தியதாக இன்டர்நேஷ்னல் கிறஸ்டியன் கன்சர்ன்  (ஐசிசி) என்ற அமைப்பிடம் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றவர்கள் காட்டிற்குள் ஒடிவிட்டதாகவும் சிலர் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு சென்றதாகவும் தெரிய வருகிறது.

பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தாக்குதல்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, ​​நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள் என  போலீசார் அவர்களிடம் கூறியுள்ளனர்.

"சிறு குழந்தைகளும் பெண்களும் தங்கள் குடும்பங்களுடன் திறந்த இடங்களில், கடுமையான குளிரில் அமர்ந்து, உணவு, தண்ணீரின்றி, தங்கள் சுவாசத்தால் கைகளை சூடேற்றி குளிரைப் போக்க முயற்சித்தனர்," என்று நேரில் பார்த்த ஒரு சாட்சி ஐசிசியிடம் கூறியுள்ளார்.

தீவிர இந்து த்துவாவினர் 39 கிறிஸ்தவர்களைக் கொன்று 3,906 வீடுகளை அழித்த ஆகஸ்ட் 2008 பற்றி  மேற்கோள்காட்டி, "இந்தப் பெரிய அளவிலான வன்முறைத் தாக்குதல்கள் கந்தமால் கிறிஸ்தவ எதிர்ப்புக் கலவரத்தின் அதிர்ச்சிகரமான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகின்றன" என்று ஒரு சர்ச் ஃபாதர் கூறியுள்ளார். மேலும்,  "இந்த சம்பவங்கள் மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, மேலும் வருத்தமான விஷயம் என்னவென்றால், அதிகாரத்தில் உள்ளவர்கள் உதவ முன்வரவில்லை." என்பதுதான் என்கிறார் அந்த ஃபாதர்.

2014-ல் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாஜகவும் (பாரதிய ஜனதா கட்சி) ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன” என்று ஐசிசி தலைவர் ஜெஃப் கிங் கூறுகிறார்.  “இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அவர்கள் கிறிஸ்தவர்களை குறிவைத்து சட்டங்களை இயற்றுவதோடு, கொள்கைகளையும் அமல்படுத்தியுள்ளனர்.  இந்த வார தாக்குதல்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் மீதான இந்த வெறுப்பு விரோதத்தின் விளைவாகும்.  இது இந்திய
கிறித்தவர்களுக்கு   ஆபத்தான சூழலை அதிகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:



சேரங் கிராமத்தில் 50 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தாக்கப்பட்டனர்.

தெம்ருகான் கிராமத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

சிம்டி கிராமத்தில், விசுவாசிகளின் 20 வீடுகள் சூறையாடப்பட்டன, ஒரு தேவாலயம் இடிக்கப்பட்டது, 25 பேர் காயமடைந்தனர்.

பட்பால் கிராமத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர்;  மற்ற கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தப்பட்டனர் மற்றும் அவர்களது முன்னாள் மதத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

போர்வாண்ட் கிராமத்தில், கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் திருடப்பட்டன.

போர்பால் கிராமத்தில் உள்ள லச்சு கரங்காவின் தேவாலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டன.

மோடெங்கா கிராமத்தில் கிறித்தவ  விசுவாசிகள் தாக்கப்பட்டனர்.

பால்னா கிராமத்திலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கோஹ்டா, ஆமாசரா மற்றும் மொடெங்கா கிராமங்களில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர்.

கொங்கேரா கிராமத்தில் கிறித்தவ விசுவாசிகள் தாக்கப்பட்டு, அவர்களில் நான்கு பேர் கொண்டகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மெயின்பூர் கிராமத்தில், இரண்டு கிறிஸ்தவர்கள்  வெளியேற்றப்பட்டு தாக்கப்பட்டனர்.

கிபாய் பலேங்கா கிராமத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு கோண்டகானில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புஸ்வால் கிராமத்தில், கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர், ஒரு தேவாலயம் சேதப்படுத்தப்பட்டது.

ஃபார்ஸ்கானில் உள்ள முண்ட்பால் கிராமத்தில், நான்கு கிறிஸ்தவ குடும்பங்கள் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டன.

கொக்டி கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு கோண்டகான் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குல்ஹாத் கிராமத்தில் இருந்து ஒரு கிறிஸ்தவ குடும்பம் வெளியேற்றப்பட்டது.

கார்கானில் மூன்று கிறிஸ்தவ குடும்பங்கள் விரட்டியடிக்கப்பட்டன.

நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள சாந்திநகரில் உள்ள தேவாலயம் தாக்கப்பட்டது.

-அபு 

Comments