இந்திய கிறித்தவர்கள் மீது அதிகரிக்கும் இந்துத்வா தாக்குதல்கள்!

இந்திய கிறித்தவர்கள் மீது அதிகரிக்கும் இந்துத்வா தாக்குதல்கள்!


கிறிஸ்துமஸ் பொதுவாக நயோமி கிரேசிக்கு ஆண்டின் விருப்பமான தருணமாகும்  ஆனால் இந்த ஆண்டு, கிரேசி மகிழ்ச்சியை விட பயத்தை வெகுவாக உணர்கிறார்.  வலதுசாரி இந்துத்வா குழுக்கள் சமீபத்தில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் அவரது கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்குகின்றன.

கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் தனது சொந்த நகரமான பெங்களூரில் உள்ள தேவாலயத்திற்குச் செல்லும்போது, ​​​​சபைக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.  ‘இது ஒரு மன சித்திரவதை.  நாங்கள் தேவாலயத்திற்கு செல்ல முடியாது அல்லது அவர்கள் எங்களை கொன்றுவிடுவார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் போலீசார் எங்களை பாதுகாப்பதாகவும் எங்களுக்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளனர், ”என்று கிரேசி கூறுகிறார்.

இந்தியாவின் வரலாற்று பூர்வமான கிறிஸ்தவ சமூகம் கி.மு 52க்கு முந்தையது.   தாமஸ் என்று அழைக்கப்படும் அப்போஸ்தலன் தாமஸ், தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு வந்து ஒரு சிறிய குழு குடியிருப்பாளர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் என்று நம்பப்படுகிறது.

இன்று கிறித்தவ சமூகம், கோட்பாட்டளவில், இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பில்  ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறா்கள்.  28 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய கிறித்தவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதமாக உள்ளனர்.

ஆனாலும் கிறித்தவ சமூகத்தின் உயிர்வாழ்வு இதற்கு முன் எப்போதும் இது போன்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதில்லை.  2022 ஆம் ஆண்டில்,  யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் (யுசிஎஃப்)என்ற அமைப்பின் அறிக்கையின் படி, ஏற்கனவே 550க்கும் மேற்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவின் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளன.  இதுவே எந்த ஆண்டும் இல்லாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

இந்தியா பாரதீய ஜனதா கட்சியால் (BJP) ஆளப்படுகிறது மற்றும் 2019 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் பிரபலமான பிரதமரான நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா உள்ளது. மோடியின் ஆட்சியின் கீழ், உலக அளவில் இந்தியா ஒரு இடத்தைப் பிடிக்கத் தகுதியற்றது என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.

இருப்பினும், உள்நாட்டில் தங்கள் அதிகாரத்தை பலப்படுத்த, பிஜேபி பல பிரிவினைவாத இந்துத்வா தேசியவாத கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது.  சிறுபான்மையினர் குறித்து நாட்டின் பெரும்பான்மையான இந்து வாக்காளர்களிடம் முறையிடுவதே அவர்களின் நோக்கம்.

  இது இந்தியாவின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதை உள்ளடக்கியது.  கிறிஸ்தவர்களிடமிருந்து மாநில சலுகைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், கிறித்தவர்கள  நாட்டில் அரசியல் பதவிகளை வகிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் பாஜக முன்மொழிகிறது.


சுமார் ஆறு மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) போன்ற இந்தியாவின்  சக்திவாய்ந்த வலதுசாரி இந்துக் குழுக்களுக்கு பிஜேபியின் பேச்சுக்கள் தைரியம் அளித்துள்ளன.  இந்த குழுக்கள் இப்போது கிறிஸ்தவர்கள், அவர்களின் தேவாலயங்கள் மற்றும் போதகர்களுக்கு எதிராக வன்முறை கும்பல் தாக்குதல்களை அதிகளவில் முன்னெடுத்து வருகின்றன.

  சமீபத்தில், மத்திய இந்திய மாநிலமான சத்தீஸ்கரில்,  கிறிஸ்தவர்களுக்கு எதிராக 20 ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடந்தன.  200க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம்  பஸ்தாரில் வசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்கள் வெட்கக்கேடானது மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது' என்று UCF இன் தேசியத் தலைவர் டாக்டர் மைக்கேல் வில்லியம்ஸ் ஒரு அறிக்கையி்ல் தெரிவித்திருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் பரப்பும் இந்த வெறுப்புப்பரப்புரைக்கு இந்தியாவில் இடமில்லை. இந்துத்வா குற்றவாளிகள் மீது  அதிகாரிகள் உடனடியாகக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவர்கள் நம் தேசத்தின் கட்டமைப்பிற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்துகின்றன.

கிறிஸ்தவர்கள் இந்துக்களை மதம் மாற்றவும், இந்தியாவின் மத அமைப்பை மாற்றவும் முயற்சிப்பதாக இந்தக் குழுக்கள் பரவலாகக் குற்றம் சாட்டுகின்றன.  தற்போது இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள். நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களின் விகிதம் சுமார் இரண்டு சதவீதம்  ஆகும். இது, 1950 களில் இருந்து ஒரே சீராக  உள்ளது.

நாட்டின் காவல்துறையும் நீதித்துறையும் பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் போன்ற குழுக்களுடன் கூட்டாக உள்ளன  அல்லது குறைந்தபட்சம் அனுதாபம் காட்டுகின்றன. குறிப்பாக கிராமப்புற இந்தியாவில், இது குறரறவாளிகள்  தண்டனையிலிருந்து தப்பி சுதந்திரமாக உலவும் சூழலை உருவாக்குகிறது.

இந்தியாவின் மத்திய மாநிலமான ஜார்கண்டில் உள்ள பிச்சிகடா கிராமத்தில் வசிக்கும் 26 வயதான ரீனா குமாரி, இதுபோன்ற ஒரு பயங்கர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.  குமாரி 2017 ல் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், குமாரி மீண்டும் இந்து மதத்திற்கு மாற மறுத்ததால் அவர் தனது வீட்டிலிருந்து அவரது கிராமத்தில் உள்ள ஒரு சதுக்கத்திற்கு ஒரு கும்பலால் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தாக்கப்பட்டதில் மயக்கமடைந்தார்.  தன்னைத் தாக்கியவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும், அவர்கள் வேறு கிராமம் அல்லது அருகிலுள்ள நகரத்திலிருந்து வந்தவர்கள் என்றும் குமாரி கூறுகிறார்.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவிய பின்னரே போலீஸார் குற்றவாளிகளைக் கைது செய்தனர். ஆனால், " என்னைத் தாக்கியவர்கள் ஓரிரு நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் நான் வசிக்கும் இடத்தில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.  மற்ற குடியிருப்பாளர்கள் என் நம்பிக்கையை கடைப்பிடிக்க அனுமதிக்காததால் நான் எனது கிராமத்தை விட்டு வெளியேற நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

எனது நண்பர்களிடமும் கூட என்னிடம் பேச வேண்டாம் என அவர்கள் சொல்லி வைத்துள்ளனர்" என்கிறார் குமாரி.

2014ல் மோடி முதன்முதலில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் 220 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின்    கிறிஸ்தவ   அமைப்பான 'அலையன்ஸ் டிஃபன்டிங் ஃபரீடம்' குறிப்பிட்டுள்ளது.  ஓபன் டோர்ஸ் இன்டர்நேஷனல் என்கிற உலகளவில் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிக்கும் இன்னொரு கிறிஸ்தவ அமைப்பானது, 2022 ஆம் ஆண்டில்,  கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தாக இருக்கும் உலகின் பத்தாவது   நாடாக இந்தியாவை மதிப்பிட்டுள்ளது. இந்தியா 2014 ல் கிறித்தவர்களுக்கு ஆபத்தான நாடுகளில் முதல் 30 இடங்களுக்கு வெளியே இருந்தது.

இந்திய அரசின் சட்டங்கள் நாட்டில் கிறிஸ்தவர்களை நடத்துவதை மோசமாக்கியுள்ளது.  குறைந்தபட்சம் ஒன்பது மாநிலங்களாவது மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன, அவை பொது இடங்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றினால் மாதக்கணக்கில் சிறையில் தடுத்து வைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய அரசாங்கத் தரவுகளின்படி, 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் குறைந்தபட்சம் 450 கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தங்கள் நிதியுதவியை நிறுத்தியுள்ளன.  கடந்த டிசம்பரில், கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டிக்கு (MoC) சொந்தமான கணக்குகளை முடக்குவதாக இந்திய அரசு அறிவித்தது, இதன்  ஊழியர்கள் இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தனர்என இதற்கு இந்திய அரசு காரணம் கூறியது.

"இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது குறித்து நான் நிச்சயமாக கவலைப்படுகிறேன்.  கடந்த தசாப்தத்தில் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சமூக வன்முறைகள் கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படி மனநிலை மாறியுள்ள விதம் மிகவும் கவலையளிக்கிறது" என்கிறார் இங்கிலாந்து திருச்சபையின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான  ட்ரூரோ பிஷப் பிலிப் மவுன்ஸ்டீபன்.  கிறிஸ்துவர் மீதான துன்புறுத்தலுக்கு வெளியுறவு அலுவலகத்தின் பதில் குறித்த ஆய்வாளருமவார் இவர்.

இந்தியாவின் கிறிஸ்தவர்களுக்கு, எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக இருந்ததில்லை.  சிலர் தங்கள் நம்பிக்கையைத் திரும்பப் பெற்றாலும்,  மாறாக அவர்கள் தங்கள் வழிபாட்டை   ரகசியமாக செய்து வருகிறார்கள். தேவாலயங்கள் இரவில் மறைவாக சேவைகளை செந்கின்றன. ஞானஸ்நானம் காடுகளில்  நடைபெறுகிறது. வழிபாட்டாளர்கள் ரகசிய மாக ஆடியோக்களில் பைபிளைக் கேட்கிறார்கள்.

"நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட மிகவும் பயப்படுகிறோம்.  கிறிஸ்மஸ் பாடலை (கரோல் ) பாடுவதற்காக வீடுகளுக்குச் சென்றால், நாங்கள் தாக்கப்படப் போகிறோமா என்று அச்சமாக உள்ளது" என்கிறார் கிரேசி.

-ஜோய் வாலன்
(The  Spectator)
தமிழில்: ஃபைஸல்.

Comments