மதுரா: ஷாஹீ ஈத்கா மஸ்ஜிதில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு! - மீறப்படும் 1991 சட்டம்!!

மதுரா: ஷாஹீ ஈத்கா மஸ்ஜிதில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
- மீறப்படும் 1991 சட்டம்!!


உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜனம்பூமி கோவிலை ஒட்டி அமைந்துள்ள  ஷாஹி ஈத்கா மசூதியில்   அமீனா  (நீதிமன்ற ஊழியர்) மூலம் ஆய்வு செய்ய கூடுதல் சிவில் நீதிபதி மூன்றாவது மதுரா நீதிமன்றத்தின் மூன்றாவது கூடுதல் சிவில நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்து சேனா என்ற இந்துத்வா அமைப்பு தொடர்ந்த ஒரு வழக்கை அடுத்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 8 ஆம் தேதி மதுரா நீதிமன்றத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி விவகாரம் தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வழக்கின் அடுத்த தேதி ஜனவரி 20, 2023 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஷாஹி ஈத்கா மஸ்ஜித் வளாகத்தின் அனுபோகத்தைக்  கோரியும், அங்குள்ள தற்போதைய மஸ்ஜித்தை இடித்துத் தள்ளக் கோரியும் இந்து சேனாவின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கறிஞர் ஷைலேஷ் துபே மூலமாக  தாக்கல் செய்த மனு மீது சிவில் நீதிபதி  சோனிகா வர்மா தீர்ப்பளித்துள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணா கோவிலை இடித்து 13.37 ஏக்கரில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் ஷாஹீ  ஈத்கா மஸ்ஜித் கட்டப்பட்டது என்று மனுதாரரான குப்தா தனது மனுவில் கூறியுள்ளார்.

1992-ல் பாபர் மசூதி இடிப்பு மற்றும் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முதல், மசூதிகள் இருக்கும் இடங்களை இந்துக்களின் புனிதத் தலங்கள் என்று இந்துத்துவா அமைப்புகள் பொய்யான கட்டுக்கதைகளைக் கூறி உரிமை கொண்டாடி வருகின்றன.  நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்து வருகின்றன.

பனாரஸில் (வாராணாசி) உள்ள கியான்வாபி மசூதி மற்றும் ஷாஹி ஈத்காவைக் குறிக்கும் வகையில், “அயோத்தி தோ சிர்ஃப் ஜாங்கி ஹை, காஷி மதுரா பாகி ஹை” என்று பாபரி மஸ்ஜித் இடிப்பின்போது இந்துத்துவா தலைவர்களால் எழுப்பப்பட்ட  முழக்கம் இன்று பல்வேறு இந்துத்துவா சக்திகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது.

வாரணாசி கியான் வாபி, மதுரா ஷாஹி ஈத்கா மஸ்ஜிதுகள் மட்டுமல்லாமல், பெங்களுரு சாம்ராஜ் நகரில் உள்ள  முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஈத்கா மைதானம் மற்றும அங்குள்ள மஸ்ஜித், மைசூரு ஸ்ரீரங்கப்பட்டினம் திப்பு சுல்தான் கோட்டையின் நுழைவாயிலில் உள்ள ஜாமியா மஸ்ஜித், சிக்மகளூரில் உள்ள பாபா புதான்கிரி தர்கா மற்றும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ஆகியவை இந்து கோவில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக பொய்ப்பிரச்சாரம் செய்வதோடு அவற்றை
உரிமைகோரி நீதிமன்றங்களிலும் வழக்குகள தொடுக்கப்பட்டு அவ்வப்போது இந்துத்துவாக்களால் வகுப்புப் பதட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.


மத வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு ஏற்பாட்டுச் சட்டம் 1991 தெளிவாக, இந்தியவில் 1947 ஆகஸ்டு 15ல் இருந்த மத வழிபாட்டுத்தலங்களின்தன்மையை மாற்றக்கூடாது என அமைதி, ஒற்றுமை  மற்றும் சகோதரத்துவத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது..இந்த சட்டம் அமலில் இருந்தும், இந்துத்துவாக்கள்  முஸ்லிம்களின் மஸ்ஜிதுகளை உரிமை கோரி தாக்கல் செய்யும் வழக்குகளின்போது - மேற்கண்ட 1991 சட்டத்திற்கு விரோதமாக, 
தொல்லியல் ஆய்வு, வீடியோகிராஃபி ஆய்வு, அமினா மூலம் ஆய்வு என பெரும்பாலும் கீழ் நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வருகின்றன.

இது போன்ற உத்தரவுகள் 1991 சட்டத்திற்கு எதிரானவை என்பது  மாண்புமிகு நீதிபதிகளுக்கு தெரியாததல்ல.  தெரிந்தநிலையில், தனது உத்தரவு முஸ்லிம்களால் மேல் முறையீடு செய்யப்படும். அவற்றில் இடைக்கால தடைகள் வழங்கப்படும்,வழக்குகள் நீளும், இதனால சர்ச்சைகள் தொடரும், மீடியாக்கள் இவற்றை செய்திகளாக்கும், அவை இந்த சர்சைகளை மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பன போன்ற உள்நோக்கத்துடன் இந்துத்வா சிந்தனை கொண்ட நீதிபதிகளால் இது போன்ற தீர்ப்புகள் வழுங்கப்படுகின்றன.

அப்படி  வாரணாசி சிவில் நீதிமன்றத்தால் கியான்வாபி மஸ்ஜித் விவகாரத்தில்  வழங்கப்பட்ட வீடியோகிராஃபி ஆய்வுக்கான உத்தரவுதான்- மஸ்ஜிதில்  முஸ்லிம்கள் தொழுகைக்கு முன் கை, கால்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் நீர்த்தடாகத்தில் அமைந்திருக்கும் நீரூற்று  சிவலிங்கம்  தான் என்ற இந்துவாவினரின் பொய்ப்பிரச்சாரத்திற்கு காரணமானது. இப்போது அந்த குறிப்பிட்ட இடம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

1991 சட்டத்தை மீறும் உத்தரவுகள் இது போன்ற விளைவுகளைத் தான் தரும். மதவழிபாட்டுத் தலங்களை உரிமை கோரும் வழக்குகளை 1991 சட்டத்தைக்காட்டி நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தாலே போதும். இந்துவாவினரின் இது போன்ற முயற்சிகளுக்கு அது முடிவுகட்டும் ஆனால், நீதிமன்றங்களும்   காவி வண்ணம் பூசிகொள்ளும் இன்றைய சூழலில் இதை எதிர்பார்க்க முடயுமா?

-அபு 

 

Comments