தி வயர் இணையதள ஊடகம் மீதான தில்லி போலீஸின் நடவடிக்கை!

Siddarth varadharajan

 தி வயர் இணையதள ஊடகம் மீதான தில்லி போலீஸின் நடவடிக்கை!

பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவரும், மேற்கு வங்கத்தில் அக்கட்சியின் இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியாவின் புகாரின் பேரில், 'தி வயர்' என்ற செய்தி இணையதளம் மீது தில்லி போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அமித் மாளவியா, தன்னைப் பற்றியும் சமூக ஊடக நிறுவனமான 'மெட்டா' (பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) பற்றியும் 'போலி செய்திகளை' வெளியிடுவதாகக் கூறி 'தி வயர்' மீது மோசடி குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, அமித் மாளவியா 700 சமூக வலைதள இடுகைகளை நீக்கம் செய்ய  மெட்டாவில் தனது சிறப்பு சலுகைகளை பயன்படுத்தினார் என தி வயர் குற்றம்சாட்டி செய்தி வெளியிட்டிருந்தது.


இதனையடுத்து, தி வயர் நிறுவனர் சித்தார்த் வரதராஜன், வயர்  இணையதளத்தின் ஆசிரியர் எம்.கே.வேணு, துணை ஆசிரியர் ஜாஹ்னவி சென் ஆகியோரின் வீடுகளில் கடந்த அக் 31ம் தேதி
டெல்லி போலீசார்  சோதனை நடத்தியுள்ளனர். மாளவியா அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி, போலி, அவதூறு மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சோதனைகள் நடந்துள்ளன.

“காவல்துறையினர் மாலை 4.40 மணியளவில் வந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டனர். அமித் மாளவியா தாக்கல் செய்த புகாரின் மீதான எஃப்.ஐ.ஆருக்கு டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சார்பாக இங்கு வந்திருப்பதாகக் அவர்கள் கூறினர்.  குளோனிங்கிற்காக எனது ஐபோன் மற்றும் ஐபேடை எடுத்துச் சென்றனர்" என்கிறார் வேணு.

“அவர்கள் கேட்ட சாதனங்கள் மற்றும் கடவுச்சொற்களை நாங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.  அவர்கள் நான்கு சாதனங்களை எடுத்துள்ளனர் - ஒரு மேக்புக், இரண்டு ஐபோன்கள் மற்றும் ஒரு ஐபேட், ”என்று வரதராஜன் கூறியதாக 'தி ஸ்க்ரால்'  இணையதளம்  செய்தி வெளியிட்டுள்ளது.

மாளவியாவின் புகார் சமூக ஊடக நிறுவனமான மெட்டா பற்றிய தொடர் கட்டுரைகள் தொடர்பானது.   தி வயர் செய்தியாளர் குழுவின் உறுப்பினரால் அவை ஃபோர்ஜரி செய்யப்பட்டதாகக் கூறி, அவை பின்னர் திரும்பப் பெறப்பட்டன.  மெட்டா கட்டுரைகளில் பணியாற்றிய ஆய்வாளர் தேவேஷ் குமார் மீது தி வயர் புகார் அளித்தது, அவர் "தி வயரையும் அதன் நற்பெயரையும் சேதப்படுத்தும் நோக்கில் ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற பிற பொருட்களை தயாரித்து வழங்கியதாகக் அது குற்றம் சாட்டியுள்ளது.


Comments