சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பு!
சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பு!
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-ஆவது திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது.
இட ஒதுக்கீட்டின் நோக்கம் சமூகநீதியை நிலைநாட்டுவது தான்.அதனை இந்த தீர்ப்பு சிதைத்திருப்பதாக சமூகநீதி ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி இரன்டாவது வாரத்தில் நாடாளுமன்றத்தில் அவசர, அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் பல மாநிலங்களிலும் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது. பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்த சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என 3:2 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்துள்ளனர். ஆனால்,
இந்த தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்கிறார்கள் சமூகநீதி ஆர்வலர்கள்.
கல்வி, சமூக நிலை ஆகியவற்றில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் . பாபா சாஹேப் அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கல்வியிலும், சமூகநிலையிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதனால், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.
எந்த கணக்கெடுபபும் நடத்தப்படாமல், புள்ளிவிபரங்களுமில்லாமல் உயர்வகுப்பு ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது குறித்து உச்சநீதிமன்றம் எந்த வினாவும் எழுப்பாமல் தீர்ப்பளித்திருக்கிறது. அதேசமயம், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது, அதை உறுதி கூடுதல் புள்ளிவிவரங்களை திரட்ட வேண்டும் என்று கூறி அந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.
ஏற்கேனவே பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை பெற்று வந்த நிலையில்,
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க, அவர்களை அடையாளம் காண மண்டல் ஆணையம் ஆய்வு செய்த 11 காரணிகளில் ஒன்று கூட தனித்த பொருளாதாரம் சார்ந்தவை அல்ல. கடன், குடிசை வீடுகள், குடிநீர் வசதி இல்லாமை, சமூகரீதியாக பின்தங்கிய நிலை போன்ற அம்சங்கள் தான் கருத்தில் கொள்ளப்பட்டன. சமூக ஏற்றத்தாழ்வுகளின் கொடிய அடக்குமுறைகளை இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர் என்பதால் தான் ஓபிசி இட ஒதுக்கீடு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மண்டல் அறிக்கையை எதிர்த்து பிஜேபியின் பின்னணியில் உயர்சாதி மாணவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.
1979 இல் ஜனதா கட்சி அரசாங்கத்தால் பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் இந்தியாவின் சமூக ரீதியாக அல்லது கல்வியில் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காணும் ஆணையுடன் நிறுவப்பட்டது. ஜாதிப் பாகுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக மக்களுக்கு இடஒதுக்கீடு குறித்த கேள்வியை பரிசீலிக்க இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான பிபி மண்டல் தலைமையில் , பின்தங்கிய நிலையைத் தீர்மானிக்க பதினொரு சமூக, பொருளாதார மற்றும் கல்விக் குறியீடுகளைப் பயன்படுத்தியது. வெறும் பொருளாதாரக் காரணியை அது எடுத்துக்கொள்ளவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டப்பிரிவு 15 (4) , "சமூக ரீதியாக அல்லது கல்வியில் பின்தங்கிய குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவோ அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காகவோ, இந்தச் சட்டப்பிரிவு அல்லது பிரிவு (2) ல் எதுவும் அரசை தடுக்காது. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர்". எனவே மண்டல் கமிஷன் 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவைப் பயன்படுத்தி ஒரு அறிக்கையை உருவாக்கியது.
இவற்றில் சமூகரீதியாக பின்தங்கிய நிலைதான் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்போது உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில், உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும், செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்திருந்தாலும் கூட, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 5 நீதிபதிகளும் கூறியிருக்கின்றனர். இது இட ஒதுக்கீட்டின் தத்துவத்தை தகர்க்கக் கூடியதாய் உள்ளது. இது சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க இது உதவாது!

Comments
Post a Comment