தடை செய்யப்பட்ட அமைப்புடனான தொடர்பு யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றமா?

 தடை செய்யப்பட்ட அமைப்புடனான தொடர்பு யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றமா?

அண்மையில் , தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்ட தொண்டர்கள் அல்லது உறுப்பினர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 பேரை யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது கேரளா போலீஸ்.
Thwaha Faisal and Shuhaib

முதலாவது சம்பவம் கடந்த செப்.28ந் தேதி இடுக்கி மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.“இடுக்கி மாவட்டத்தின் நெடும்கன்டம் பகுதியில் பி.எஃப்.ஐ அமைப்பினர் 7 பேர் பேரணி  நடத்தி, பாப்புலர் பிரண்ட்டிற்கு ஆதரவாகவும்
Banned PFI

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். மறுநாள் இடுக்கி போலீஸ் அவர்களுக்கு எதிராக, ஊர்வலம் சென்றதாகக் கூறி யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது” என மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளில் , ஊர்வலத்தில் கலந்து கொண்டது யார் என ஆராய்ந்து வருவதால் ஒருவரும் கைது செய்யப் படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 27ம் தேதி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால்  அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. மறுநாள் செப். 28ம் தேதி, பாப்புலர் பிரண்ட்டின் கேரளா மாநிலத் தலைவர் அந்த அமைப்பு கலைக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். பிஎஃப்ஐ அமைப்பு கேரளத்தில் பல பகுதிகளில் வலுவாக உள்ளது என்பதால் என்.ஐ.ஏ வின்  நடவடிக்கையினால்  இங்கு 22 பேர் யுஏபிஏ
சட்டத்தில் கைதாகியுள்ளனர்.

 இரண்டாவது சம்பவம்  செப்டம்பர் 29ம் தேதி நடந்தது. 7 பேர் கொண்ட பி.எஃப்.ஐ உறுப்பினர்கள் திருவனந்தபுரம் கள்ளம்பலம் பகுதியில், ஒன்றிய
அரசின் பி.எஃப்.ஐ தடைக்கு பின்னர், அங்கு ஒரு கடைக்கு  அருகில் இருந்த கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த கொடியை அகற்றியுள்ளனர். இந்த ஏழு பேரில் இருவரை கைது செய்து அவர்கள் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது போலீஸ். ஸ்பாட்டில் இருந்த மற்ற 5 பேரை போலீஸ் தேடி வருவதாகவும் தகவல் சாகிறது போலீஸ்.


முன்னதாக, பாப்புலர் பிரண்ட் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதற்காகவே காத்துக்கொண்டிருந்ததைப் போல, துரிதமாக இயங்கிய கேரளாவின் சிபிஎம் அரசாங்கம், பிஎஃப்ஐக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை மாவட்ட மற்றும் காவல்துறை தலைமைகளுக்கு வழங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. மாநில அரசு வழங்கிய
அதிகாரத்தை பயன்படுத்தி ஏனைய மாநிலங்களை முந்திக்கொண்டு கேரள போலீஸ் யுஏபிஏ சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரண்ட் உறுப்பினர்களை தேடித் தேடி கைது செய்திருக்கிறது.மேலும், கேரளா அரசின் இந்த அதிகாரம் அளிக்கும் அறிக்கைப்படி, மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகள் மற்றும் காவல்துறை தலைமைகள் பிஎஃப்ஐயின் நிதிகளை முடக்கவும், அலுவலகங்களுக்கு சீல் வைக்கவும், அவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாப்புலர் பிரண்ட் மீதான
தடையை தங்களது அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட
மாஜிஸ்ட்ரேட்டுகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் அமல்படுத்தவும் கேரள அரசுஅதிகாரமளித்திருந்தது.

தடை செய்யப்பட்ட அமைப்புடனான தொடர்பு யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றமா?


ஒருவர் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புடன் தொடர்பு கொள்வது அல்லது வெறும் உறுப்பினராக இருப்பது குற்றமல்ல. அது யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படாது என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள  தீர்ப்புகள் உள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 2011ல் உச்சநீதிமன்றம் அளித்த தடா வழக்கு ஒன்றில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருப்பது  குற்றமல்ல எனத்
தீர்ப்பளித்துள்ளது. சட்டீஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தடை செய்யப் பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவருக்கு (கடிதங்கள், ஆவணங்கள் தேவையான பொருட்களை கொண்டு சேர்க்கும்) கூரியராக இருந்ததாகக் கூறி பிரபல சிவில் உரிமைஆர்வலரான பினாயக்  சென்னுக்கு சட்டீஸ்கர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த  வழக்கில் நீதிபதியான மார்கண்டேய கட்சு மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு, “எங்கள் கருத்துப்படி, தடா சட்டத்தின் பிரிவு 3 (5) ஐ
நேரடியான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி எடுத்தால் அது, அரசியல் அமைப்பின் 19 (பேச்சு சுதந்திரம்) மற்றும் பிரிவு 21 (தனிமனித சுதந்திரம்) ஆகியவற்றை மீறும் நாம் மேலே சொன்ன அவதானிப்புகளின் வெளிச்சத்தில் இதனைப் பார்க்க வேண்டும். எனவே, ஒருவர் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் வெறும் உறுப்பினராக இருப்பது என்பது அவர் வன்முறையில் ஈடுபடாதவரை அல்லது வன்முறைக்கு மக்களை தூண்டிவிடாதவரை அல்லது வன்முறை மூலம் அல்லது வன்முறையை தூண்டி விடுவதன் மூலம் பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிக்காதவரை அவரை குற்றவாளி ஆக்கி விட முடியாது” என தெரிவித்திருந்தனர் (தீர்ப்பின் ஒரு பகுதி).
Apex Court


அரூப்  பயான் என்ற ஆர்வலர் தடை செய்யப்பட்ட உல்ஃபா (The United Liberation front of Assam) என்கிற அஸ்ஸாமிய போராளி அமைப்பின் உறுப்பினராக இருந்தார் என்பதற்காக குவாஹாத்தி தடா நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்துஅவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உறுதி செய்யும்போதும் இதே உத்தரவை வழங்கியுள்ளது.
Justice Markandeya Katchu
Justice Oka


தடா சட்டத்தின் பிரிவு 3(5) (தடா சட்டம் இப்போது அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ) தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருப்பதை கிரிமினல் குற்றம் என்கிறது (இத்தனைக்கும் உல்ஃபா அமைப்பில் தான் எந்தவித உறுப்பினராகவும் இல்லை என மறுத்திருந்தார் அரூப்  பயான்)

"அவர் உல்ஃபாவின் உறுப்பினராக இருந்ததாகக் கருதினாலும், அவர் ஒரு செயலில் உறுப்பினராக இருந்தார் மற்றும் தீவிர உறுப்பினராக இருந்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஒருவர் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் வெறும் உறுப்பினராக இருப்பது என்பது அவர் வன்முறையில் ஈடுபடாதவரை அல்லது வன்முறைக்கு மக்களை தூண்டிவிடாதவரை அல்லது வன்முறை மூலம் அல்லது வன்முறையை தூண்டி விடுவதன் மூலம் பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிக்காதவரை அவரை குற்றவாளி ஆக்கி விடமுடியாது” என்று கூறி  கேதார் நாத்  எதிர் பீஹார் அரசு (1962) வழக்கில் அரசியல் அமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பு மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய
பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி கட்சு.

 இதேபோல, கடந்த அக்டோபர் 2021ல் உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புடனான வெறும் தொடர்பு அல்லது ஆதரவு என்பது யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றமாகாது என சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) (1967ன் பிரிவு 38 ( தடை
செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருப்பது) 39 (தடை செய்யப்பட்ட
அமைப்பிற்கு ஆதரவு தருவது) ஆகியவற்றை உள்ளடக்குகிறது. இதன்படி இரு பிரிவுகளும் 10 வருட தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் வழங்குகின்றன.

தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ, கேரளாவைச் சேர்ந்த இதழியல் மாணவரான த்வஹா ஃபைஸல் மற்றும் மூன்றாம் ஆண்டு சட்ட மாணவரான அலன் ஷு ஹைப்    ஆகியோரை கடந்த 2019ல் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தது. இவர்களுக்கு சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும், சாதி தொடர்பான நூல்கள், காஷ்மீர் விடுதலை பற்றிய துண்டு பிரசுரம், மாவோயிஸ்ட் பற்றிய மற்றும் சில நூல்கள்
இருவரிடமும் இருந்ததாகவும் என்.ஐ.ஏ குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில்
ஷுஹைப் நீதிமன்றத்தில் பிணை கேட்க, என்.ஐ.ஏ பிணைக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தது.

ஃபைஸல் ஏற்கெனவே 572 நாட்கள் சிறையில் கழித்திருந்தார். ஷுஹைப்பின் பிணை மனுவுக்கு எதிரான என்.ஐ.ஏவின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா ஒரு பயங்கரவாத அமைப்புடன் வெறும் தொடர்பில் இருப்பது பிரிவு 38ன் கீழான குற்றத்திற்கு போதுமானதாகாது. அதேபோல பயங்கரவாத இயக்கத்திற்கு வெறும் ஆதரவளிப்பது என்பதும் பிரிவு 39ன் கீழ் குற்றமாக வரையறுக்க போதுமானதாகாது.இந்த தொடர்பும் ஆதரவும் அந்த பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளை  தொடரும் நோக்கத்துடன் இருந்தால் மட்டுமே குற்றமாகும் என தீர்ப்பளித்திருக்கிறார்.

இன்னும் , கடந்த மே 2022ல், யுஏபிஏ சட்டத்தின் கீழ்  என்ஐஏவால் கைது செய்யப்பட்டஷைலேந்திர பதவ்ரியா மற்றும் கோமல்வர்மா எதிர் சட்டீஸ்கர் அரசு வழக்கில் பிணைகேட்டு இருவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் அகர்வால் மற்றும் ரஞ்சனி துபே ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச், சுதேஷ் கேடியா எதிர் ஒன்றிய அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைமேற்கோள் காட்டி, தடை செய்யப்பட்ட அமைப்பு பயங்கரவாத அமைப்புக்கு நிதியை 

Justice Sudha Misra


கப்பமாக செலுத்துவது, வெறும் உறுப்பினராக இருப்பது அல்லது வேறு வகையில் ஆதரவளிப்பது யுஏபிஏ சட்டத்தின் 38 பிரிவின் கீழ் குற்றமாகாது எனத் தீர்ப்பளித்திருந்தனர்.

என்ஐஏ குற்றம் சாட்டியிருந்த மேற்கண்ட இருவரும் சட்டீஸ்கர் மாநிலம் கெங்கர்  மாவட்டத்தில் ரோடு போடும் பணிகளைச் சுமுகமாகச் செய்ய நக்ஸல்களுக்கு கப்பம் கட்டினர். இதன்மூலம் பயங்கரவாத அமைப்புக்கு நிதியளித்தனர் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.கோமல் வர்மா அஜய் ஜெயின் என்பவரின் ருத்ரன்ஷ் எர்த் மூவர்ஸ் ரோடு கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியில் பங்காளியாக இருக்கிறார். அந்த கம்பெனியில் சைலேந்திர பதாவ்ரியா வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த வழக்கில் சுதேஷ் கேடியா எதிர் சட்டீஸ்கர் அரசு வழக்கில் உச்சநீதிமன்றம், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு கப்பம் செலுத்துவது பயங்கரவாதத்திற்கு நிதியளித்ததாக ஆகாது என்று கூறிய தீர்ப்பை சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் மேற்கோள் காட்டி தீர்ப்பு அளித்துள்ளது. இதில், த்வாஹா ஃபைஸல் எதிர் ஒன்றிய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மேற்கோள் காட்டி, இருவருக்கும் பிணை வழங்கியிருந்தது சட்டீஸ்கர்உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கையை தொடரும் அல்லது மேம்படுத்தும் நோக்கத்துடன் அதில் உறுப்பினராக இருப்பது , ஆதரவளிப்பது,  தொடர்பில் இருப்பது  தான் யுஏபிஏ சட்டத்தின்
கீழ் குற்றம் என்பதுதான் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் தெரிய வருகிறது.
-ஃபைஸல்.

Comments